“42 நாட்கள் ஹோட்டலில் தங்கி, ஒவ்வொரு சீனாக உருவாக்கினோம்” சர்கார் பற்றி ஜெயமோகன் விளக்கம்

“42 நாட்கள் ஹோட்டலில் தங்கி, ஒவ்வொரு சீனாக உருவாக்கினோம்” சர்கார் பற்றி ஜெயமோகன் விளக்கம்
“42 நாட்கள் ஹோட்டலில் தங்கி, ஒவ்வொரு சீனாக உருவாக்கினோம்” சர்கார் பற்றி ஜெயமோகன் விளக்கம்
Published on

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். சர்கார் படத்தில் திரைக்கதை ஆசிரியராக இணைந்து பணியாற்றியுள்ள ஜெயமோகன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையயொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதையும் தன்னுடைய ‘செங்கோல்’ என்ற கதையும் ஒன்றுதான் என்று வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாக்யராஜ் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு தீர்வு எட்டாத நிலையில் நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. 

இதற்கிடையில், இரண்டு கதையும் ஒன்றுதான் என்பது போல், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் வருணுக்கு எழுதப்பட்ட கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்ததில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் சர்கார் கதை விவகாரம் தொடர்பாக யுடியூப் சேனல் ஒன்றிற்கு விரிவாக பேட்டியளித்தார். அதில், தன்னுடைய முழு கதையை படிக்காமலே பாக்யராஜ் தனக்கு மிகப்பெரிய தண்டனை அளித்துவிட்டதாக கூறியிருந்தார். மேலும், விஜய் படம் என்றாலே பிரச்னை வருகிறது என்ற கருத்தினையும் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதல்ல என்று அப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக இணைந்து பணியாற்றியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதை சொன்னார். அந்த கதை மொத்தமும் 3 வரிகள் தான். கள்ள ஓட்டு என்ற ஒரு பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டது. பிரபலமான ஒரு விஷயத்தை கருவாக கொண்ட பல கதைகள் உருவாக்கப்படுவது இயல்பான ஒன்று. பிரபல நடிகரான சிவாஜியின் ஒட்டையே இங்கு கள்ள ஓட்டாக போட முடிந்தது. அப்படிப்பட்ட கள்ள ஓட்டு ஒட்டு பிரச்னையை கதையாக உருவாக்கினோம். 42 நாட்கள் ஹோட்டலில் தங்கி, ஒவ்வொரு சீனாக உருவாக்கினோம். முருகதாஸ், அவருடைய 4 உதவி இயக்குநர், நான் உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து உருவாக்கினோம். கடந்த இரண்டு வருடங்களில் நடந்த அரசியல் சம்பவங்கள் முழுவதும் கதையில் இணைத்தோம்” என்று கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com