‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் நடித்து விஜய் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள போஸ்டரில் நீலநிற கோட் உடன் விஜய் கெத்தாக காணப்படுகிறார். இதனை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன் #SarkarKondattam என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்ரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல்‘சர்கார்’ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்பதற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிம்டாங்காரன்’ பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் காணப்படுகிறது. அத்தோடு மட்டுமின்றி ‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டை நேரடியாக காண படக்குழு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களை விமான டிக்கெட் போட்டு சென்னை அழைத்து வரவும் படக்குழு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.