பிரதமர் மோடி பற்றி, சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள ’மன் பைராகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படுகிறது. இதை பிரபல ஹீரோ பிரபாஸ் வெளியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவானது. மேரி கோம், சர்ப்ஜித் ஆகியோரின் பயோபிக் படங்களை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கி இருந்தார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மே 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிய பற்றி மற்றொரு படம் உருவாகிறது. ’மன் பைராகி’ (Mann bairagi- உலகின் மீது பற்றற்ற மனசு?) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள, இந்தப் படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். சஞ்சய் திரிபாதி எழுதி இயக்குகிறார். பிரதமர் மோடியின் இளமை கால வாழ்க்கையின் சொல்லப்படாத கதையாக இந்தப் படம் இருக்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.
‘இந்தக் கதை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய மெசேஜை கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் இளம் வயது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட விஷயங்களில் இருந்து பல்வேறு சம்பவங்களை சரியாக ஆய்வு செய்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டும் என்று நினைத்ததால் உருவாக்கி இருக்கிறேன்’’ என்று சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.
’நம் நாட்டின் உயர்ந்த, வலிமையான தலைவராக இருக்கிற ஒருவரின் சொல்லப்படாத, உணர்வுபூர்வமான கதை இது’ என்கிறார் இயக்குனர் சஞ்சய் திரிபாதி. இந்தப் படம் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரதமர் மோடியின் 69 வது பிறந்த நாளான இன்று வெளியிடப்படுகிறது. பிரபல ஹீரோ பிரபாஸ் வெளியிடுகிறார்.