'சல்யூட்' விமர்சனம்: இன்னொரு கொலை, இன்னொரு விசாரணை, இன்னொரு ஹிட்!

'சல்யூட்' விமர்சனம்: இன்னொரு கொலை, இன்னொரு விசாரணை, இன்னொரு ஹிட்!
'சல்யூட்' விமர்சனம்: இன்னொரு கொலை, இன்னொரு விசாரணை, இன்னொரு ஹிட்!
Published on

துல்கர் சல்மானே தயாரித்து, நடித்திருக்கும் படம். ’ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் மஞ்சு வாரியரியருக்கும் தமிழில் அதன் ரீமேக்கான ‘36 வயதினிலே’ படத்தை ஜோதிகாவுக்கும் என்ட்ரி கொடுக்க வைத்த மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியிருக்கும் படம் ‘சல்யூட்’. அவரின் சூப்பர் ஹிட் அடித்த ‘உதயநானுதாரம், ’மும்பை போலீஸ்’, ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என பல முத்திரைப் பதித்த படங்களுக்கு திரைக்கதை அமைத்த பாபி – சஞ்சய் கூட்டணியிலேயே வெளியாகியிருக்கிறது. நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த மலையாள சினிமா தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் நேரத்தில் நடக்கும் இரட்டைக் கொலை. அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்காததால் நெருக்கடி ஏற்பட, போலீஸுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது ஆளுங்கட்சி. இதனால், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஆட்டோ டிரைவர் முரளிக்கும் இருக்கும் முன் விரோதத்தைக் காரணமாக வைத்து, அவசர அவசரமாக ஆட்டோ டிரைவர் முரளியை கைது செய்கிறது, டிஎஸ்பி அஜீத் கருணாகரன் (மனோஜ் கே ஜெயன்) தலைமையிலான போலீஸ் டீம்.

ஆனால், ”முரளி அந்த கொலையை செய்ததுபோல் தெரியவில்லையே?” என்று சந்தேகம் எழுப்புகிறார் எஸ்.ஐ. அரவிந்த் கருணாகரன்(துல்கர் சல்மான்). மனோஜ் கே ஜெயனும் துல்கர் சல்மானும் அண்ணன் தம்பிகள். தம்பி துல்கர் சொல்வதை ஒப்புக்கொள்ள மறுத்து, ஆட்டோ டிரைவர் முரளியை குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறது அண்ணன் மனோஜ் கே ஜெயன் டீம். ஆனால், அதேசமயத்தில் அதிகவேகமாக கார் ஓட்டியதாக பிடிபட்ட சந்திரன் பிள்ளை என்பவரிடம் கொலை செய்யப்பட்ட மார்ட்டின் – ஷீபா தம்பதியின் செல்போன் கண்டெக்கப்படுகிறது. இதனால், சந்திரன் பிள்ளையை விசாரிக்கச் சொல்கிறார் துல்கர் சல்மான். கேட்காத அண்ணன் துல்கருக்கு தொடர்ந்து பணி நெருக்கடிகள் கொடுக்க, ஐந்து வருடங்களுக்கு ஊதியமில்லாத ஒரு நீண்ட லீவை போட்டுவிட்டு ஹைதராபாத்துக்கு சட்டம் படிக்க போய்விடுகிறார் துல்கர்.

அப்படியென்றால், யார் அந்த சந்திரன் பிள்ளை? இரட்டை கொலைக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டா? லாங் லீவில் சென்ற துல்கர் காரணங்களையும் குற்றவாளியையும் கண்டுபிடித்தாரா? அனைத்தையும் த்ரில்லிங்குடன் விவரிக்கிறது மீதிக்கதை. 

துல்கர் சல்மான் தனது அண்ணன் மீது கைவைத்தக் காரணத்துக்காக அரசியல்வாதியை அடித்து துவைத்து சட்டையை கழட்டுவது, ஆட்டோ டிரைவரை வஞ்சகமாக போலீஸ் கைது செய்யும்போது குற்ற உணர்வுடன் கூனி குறுகுவது, உயரதிகாரிகளின் உத்தரவு வரும்போது தனது இயலாமையை வெளிப்படுத்துவது, அதேநேரத்தில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன் என சீன் பை சீன் தனது கேஷுவல் நடிப்பால் ரெஸ்ட் கொடுக்காமல் பார்வையாளர்களை அரெஸ்ட் செய்து விடுகிறார். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று பல நூறு கிலோமீட்டருக்கு தூக்கியடிக்கப்பட்ட பிறகும்கூட, சாதாரண போஸ்டர் மூலம் அவர் ட்ரேஸ் செய்ய ஆரம்பிக்கும் டெக்னிக் பாராட்டுக்குரியது.

லத்தியை வைத்து செய்வது புலனாய்வு அல்ல; புத்தியை வைத்து செய்வதுதான் புலனாய்வு என்பதை துல்கரின் புலனாய்வு மூலம் சொல்ல வருகிறது திரைக்கதை. எந்த இடத்திலுமே அவரது புலனாய்வில் யாரையும் லத்தியால் அடிக்கவில்லை, கடுமையாக துன்புறுத்தவுமில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை. மிக நிதானமாக நேர்த்தியாக தெளிந்த நீரோடைபோல் பயணிக்கிறது அவரது புலனாய்வு பயணம்; திரைக்கதையும்தான்.

அதேபோல், ஒரு சாதாரண போலீஸின் புலனாய்வில் என்னவெல்லாம் அதிகாரம் இருக்கிறதோ, வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் பயன்படுத்தி ஹீரோயிஸம் இல்லாமல் இயல்பாக கண்டுப்பிடிப்பதுதான் திரைக்கதையில் த்ரில்லராக அமைந்திருக்கிறது. கொலைகாரன் கொலையை டைவர்ட் செய்யும் டெக்னிக் கொஞ்சம் பதட்டப்பட வைக்கிறது. ஒருவன் எப்படியெல்லாம் சீட்டிங் செய்ய வாய்ப்பிருக்கிறதோ அதையெல்லாம் மிக எதார்த்தமாக காண்பிக்கப்படுகிறது.சமூக கட்டமைப்போடு ஒன்றிப்போன டிஎஸ்பியாக நடித்திருக்கும் மனோஜ் கே ஜெயன், தம்பி துல்கர் சல்மானையும் அதே கட்டமைப்புக்குள் கட்டிவைக்க முயற்சிப்பது, குடும்பத்தினரோடு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வது, தம்பியை தடுக்கவும் முடியாமல், தடுக்காமல் விட்டால் தானும் மாட்டிக்கொள்வோம் என்ற பதை பதைப்போடு செயல்படும் அவரது ரியாக்சன்கள் ரியலாக இருக்கின்றன.

போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்பது உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதானே தவிர, பொலிடிகல் பிரஷரால் அவசர அவசரமாக அப்பாவிகளை கைது செய்யும்போது அவர்களது குடும்பம் எப்படியெல்லாம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை காண்பிக்கிறது இப்படம். துல்கர் சல்மானுக்கு துணையாக நிற்கும் எஸ்.ஐ மகேஷ்ஷாக வரும் ஷாகின் சித்திக்கின் கதாப்பாத்திரமும் நம்மை ஈர்த்துவிடுகிறது. அவரும் ஒரு செகெண்ட் ஹீரோவாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

திரைக்கதை ஆசிரியர்கள் பாபி – சஞ்சய் கூட்டணியின் திரைக்கதைக்கு வெறும் சல்யூட் அடிப்பது மட்டும் போதாது. அதுவும், க்ளைமாக்ஸில் கொலைக்குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது அவன் என்ன குற்றங்களை செய்ததால் பலரும் பாதிக்கப்பட்டார்களோ அதேபோல் பார்வையாளர்களையும் பாதிப்படைய வைகிறது திரைக்கதை. அதுவே, புதுமையான ’யுக்தி’சாலித்தனம்தான். இருவரும் மலையாள திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஆரவாரத்துடன் அதிரடி டிரான்ஸ்ஃபர் செய்யப்படவேண்டியவர்கள்.

இப்படியொரு த்ரில்லர் கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் நடிப்பில் ‘ட்ரில்’ வாங்கியிருக்கிறார் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ். முதல் காட்சியில் மிக சாதாரணமாக நடக்கும் காட்சிக்கு பின்னால் இவ்வளவு பரபரப்பு இருந்திருக்கிறதா என்று நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறார். திரைக்கதையில் எந்தவித பூச்சாண்டியும் காட்டாமல் எதார்த்தமாக பயமுறுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஆட்டோ டிரைவர் முரளி, அவரது தங்கை கதாப்பாத்திரங்கள் இன்னும்கூட கொஞ்சம் அழுத்தமாக, தங்களது வலியை பதிவு செய்திருக்கலாமோ என்று தோன்றியது. பார்வையாளர்களுக்கு அவர்களின் வலி சரியாக பரிமாற்றம் செய்யப்படவில்லை.

ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை பின்னால் இருந்துகொண்டே நம்மை மிரட்டுகிறது. கொஞ்சம்கூட குழப்பமில்லாத எடிட்டிங் செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத்.

படத்தின் மைனஸ் இல்லாமல் இல்லை. துல்கர் சல்மான் தான் வேலை பார்த்த காவல்நிலையத்திற்கு வந்து, தான் இதற்கு முன் இங்குதான் எஸ்.ஐ ஆக இருந்தேன் என்று கடைநிலைக் காவலர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒரு காவல்நிலையத்தில் எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர்கள்கூட அடிக்கடி மாற்றப்படுவார்களே தவிர கடைநிலைக் காவலர்கள் முதல் ஏட்டுவரையிலானவர்கள் அப்படியே கூண்டோடு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அண்ணன் மகளின் திருமணத்திற்கு வரும்போதுதான் ஏற்கனவே செய்த தவறு நினைவுக்கு வருகிறது என்பதும் அதற்கு முன் பட்டம் விட்டுக்கொண்டு ஜாலியாக படித்துக்கொண்டிருக்கிறார் என்பதும் சின்ன நெருடல்.தன்னுடைய பெயரில் ஏமாற்றுகிறவன் யார் என்பதை கண்டுபிடிக்க, தலைமைச் செயலகத்தில் வேலைபார்க்கும் அந்த ஊழியர் தனியாக சென்று உயிர் தப்பி வருகிறார் என்பதும் கொஞ்சம் திரைக்கதையை சுற்றலில் விட முயன்றது போல் உள்ளது.

பொலிடிகல் பிரஷரால் ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியவர், அதை எதிர்த்து கேள்விகேட்கும் எஸ்.ஐயை பணி டார்ச்சர் கொடுத்து இழிவுபடுத்துகிறவர், பல நூறு கிலோமீட்டருக்கு பணிமாறுதல் கொடுத்து விரட்டுகிறவர். பதவி உயர்வுக்காக அரசியல்வாதிகளின் சிபாரிசை எதிர்பார்க்கிற துல்கரின் அண்ணனாக டிஎஸ்பி மனோஜ் கே ஜெயன். படத்தில் காட்டுவதுபோலவே பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டவேண்டிய இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளை ‘ரோல்மாடல்… மை ஹீரோ’ என்றெல்லாம் படத்தின் உண்மையான ஹீரோ துல்கர் சல்மான் பாராட்டுப் பத்திரம் வாதிப்பது முரண்.

க்ரைம் த்ரில்லர் கதைகள் என்றாலே திரைக்கதையின் வேகத்தை கூட்டி காண்பிக்க ஓட்டம், ஒளிதல், துரத்தல் என பரபரப்பாக்குவதோடு… பின்னணி இசையை வைத்தே பீதி கிளப்ப முயல்வார்கள். ஆனால், ’சல்யூட்’ அப்படிப்பட்ட கதைகளம் அல்ல. அதுவும், துல்கர் சல்மான் கொலைகாரனை ட்ரேஸ் பண்ணிக்கொண்டு நெருங்க நெருங்க யார் அந்த கொலைகாரன் என்ற ஹார்ட் பீட் வேகம் அதிகரித்து ஹார்ட் ஸ்பீடாகி விடுகிறது.

சாதாரணமாக வாக்கிங் போல் ஆரம்பிக்கும் திரைக்கதை… கொஞ்சம் கொஞ்சமாக ஜாக்கிங்காக உருமாறி திடீரென்று ரன்னிங்காக வேகமெடுக்கிறது. ஆனால், நம்மை அறியாமலேயே அந்த வேகம் அதிவேகமாகி அதகளமாகிவிடுகிறது. இதனாலேயே, ’சல்யூட்’ படத்தை வெறும் சல்யூட் அடித்து வரவேற்பது போதாது. அதையும்தாண்டி ஆர்ப்பரிப்போடு வரவேற்கலாம்.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com