சல்மான் கானுக்கு சிறையில் 106 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ’ஹம் சாத் சாத் ஹைன்’ (Hum Saath Saath Hain) என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கி 1998 ஆம் ஆண்டு பங்கேற்றிருந்தார் சல்மான் கான். அவருடன் நடிகர் சைஃப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்ட 5 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தென்பட்ட அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை சல்மான்கான் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு 20 ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த நிலையில், 1998, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 18 நாட்கள் ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி இறுதிவாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு 106 என்ற கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.