பிரபல இந்திப்பட நடிகர் சல்மான் கான் மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலாவை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை மிரட்டலை தொடர்ந்து சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பலத்த பாதுகாப்புடனே சென்று வருகிறார்.
இச்சூழலில் இந்தியா டிவியின் 'ஆப் கி அதாலத்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான்கான், தனக்கு வரும் கொலை மிரட்டல்கள் குறித்தும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் குறித்தும் பேசினார்.
அதில் அவர், ''எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இப்போது நான் சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு தனியாக எங்கும் செல்ல முடியாது. நான் டிராஃபிக்கில் நிற்கும்போது என்னுடைய பாதுகாப்புக்கு வரும் வாகனங்களால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
நான் நடித்த 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் 'அவர்களுக்கு 100 அதிர்ஷ்டம் கிடைத்தால் எனக்கு ஒரு அதிர்ஷ்டமாவது கிடைக்கும்' என்கிற ஒரு டயலாக் வரும். அது உண்மைதான். நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நான் எல்லா இடங்களுக்கும் முழு பாதுகாப்புடன் செல்கிறேன். நான் என்னதான் பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் எது நடக்கவிருக்கிறதோ அதுவே நடக்கும் என்பது எனக்குத் தெரியும். கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன். பல துப்பாக்கிகள் என்னுடன் வலம் வருகின்றன. இந்த நாட்களில் நான் பயந்தவனாக உணர்கிறேன்'' என்றார்.
சில வாரங்களுக்கு முன்பு மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். விசாரணையில், சல்மான் கானை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தது, மும்பையை அடுத்த தானே மாவட்டம் சகாப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சகாப்பூர் சென்ற போலீசார் சிறுவனை பிடித்தனர்.