’தபாங் 3’ இந்திப் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து பாடல் முழுவதும் பிரபுதேவா நடனமாடுகிறார்.
சல்மான் கான், சோனாக்ஷி சின்கா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்த இந்தி படம், ‘தபாங்’. அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி, வசூலில் சாதனைப் படைத்திருந்தது. இதில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் சல்மான். இது, தமிழில் சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த சோனாக்ஷியே இதிலும் நடித்திருந்தார். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது. இதன் மூன்றாம் பாகம் இப்போது உருவாகிறது. அர்பாஸ் கான் தயாரிக்க பிரபுதேவா இயக்குகிறார். சல்மான் கான் நடித்த ’வான்டட்’ படத்தை இவர், ஏற்கெனவே இயக்கி இருந்தார். சோனாக்ஷி ஹீரோயின். வில்லனாக சுதீப் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ’முன்னா பட்னாம் ஹுவா’ என்ற பாடல் இடம்பெறுகிறது. இதில் சல்மான் கானுடன் நடிகை வரினா ஹுசைன் ஆடவும் வைபவி மெர்ச்சன்ட், நடனம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் இதன் நடனத்தை பிரபுதேவாவே அமைக்கவும் பாடல் முழுவதும் அவரும் தன்னுடன் ஆட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தாராம் சல்மான். இதையடுத்து திட்டத்தை அப்படியே மாற்றி, இப்போது அந்தப் பாடலுக்கு பிரபுதேவாவே நடனம் அமைத்து சல்மானுடன் ஆடுகிறார்.
இதுபற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது, ‘’வான்டட்’ படத்தில் இடம்பெற்ற ’மேரா ஹி ஜல்வா’ பாடலில் சல்மான் கானுடன் ஆடினேன். அந்தப் பாடல் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த மேஜிக்கை இதிலும் நிகழ்த்தலாம் என்றார் சல்மான். அவர் கோரிக்கையை மறுக்க முடியவில்லை. ரசிகர்கள், எங்கள் ஆட்டத்தை இந்தப் பாடல் மூலம் மீண்டும் பார்க்கலாம்’’ என்றார்.