சாய் பல்லவி முதல் சன்னி லியோன் வரை.. அந்த விளம்பரங்களுக்கெல்லாம் நோ சொன்ன சினி பிரபலங்கள்!

சாய் பல்லவி முதல் சன்னி லியோன் வரை.. அந்த விளம்பரங்களுக்கெல்லாம் நோ சொன்ன சினி பிரபலங்கள்!
சாய் பல்லவி முதல் சன்னி லியோன் வரை.. அந்த விளம்பரங்களுக்கெல்லாம் நோ சொன்ன சினி பிரபலங்கள்!
Published on

பல கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா விளம்பரம் ஒன்றில் நடிகர் யஷ் நடிக்க மறுத்த செய்தி, சமீபத்தில் இணையத்தில் வைரலாகியிருந்தது. யஷ்ஷின் விளம்பர வாய்ப்புகளை நிர்வகிக்கும் அர்ஜூன் என்பவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் யஷ்ஷூக்கு, சமீபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாவும், ஆனாலும் அவர் அதை மறுத்து விட்டதாகவும் சொல்லியிருந்தார். தன்னுடைய ரசிகர்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்பதில் யஷ் ரொம்ப உறுதியா இருப்பதாக அவர் சொல்லியிருந்தார்.

இந்த செய்தியை தொடர்ந்து யஷ்ஷூக்கு ரசிகர்கள் பலரும் தன்னுடைய பாராட்டை தெரிவிச்சிருந்தாங்க. இந்த விஷயத்தை பொறுத்தவரை யஷ் மட்டுமல்ல... இந்திய திரையுலகில் பல பிரபலங்கள் `தவறான கருத்தை அல்லது என்னுடைய தனிப்பட்ட வரைமுறைக்கு அப்பாற்பட்ட கருத்துகளை, மக்கள் மத்தியில் பரப்பும் விளம்பர படங்கள்ல நடிக்கமாட்டேன்’ என முடிவெடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால், நம்ம `புஷ்பா’ ஸ்டார் அல்லு அர்ஜூனை சொல்லலாம். அவர் புகையிலை சார்ந்த எந்த பொருட்களின் விளம்பர படங்களிலும் தான் நடிக்கப்போவதில்லை என அதிகாரபூர்வமா அறிவிச்சிருந்தார். அதற்கு காரணமாக, `நான் எந்த புகையிலை பொருட்களும் உபயோக்கிறதில்ல. அதனால என்னுடைய ரசிகர்களுக்கும் அதேயே சொல்ல விரும்புறேன்’ என அவர் சொல்லியிருந்தார்.

தெலுங்கு உலகின் முன்னனி கதாநாயகியாக இருக்கும் சாய்பல்லவிகூட குறிப்பிட்ட ஒரு பொருளின் விளம்பரத்தை தவிர்ப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன அந்த பொருள், Fairness Cream. இதுகுறித்து அவர் அளித்தப் பேட்டியில், “இந்த மாதிரி விளம்பரங்கள்ல வர்ற சம்பளப் பணத்தை வச்சு நான் என்ன செஞ்சுட போறேன் சொல்லுங்க... வீட்டுக்கு போய் 3 சப்பாத்தியும், கொஞ்சம் சாதமும் சாப்பிடப்போறேன். அதைத்தவிர மிகப்பெரிய தேவைனு எனக்கு எதுமில்ல. அதனால, என்னை சுத்தியிருக்கவங்களை நான் சந்தோஷப்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் மட்டும் போதும்னு நினைக்கிறேன். நிறத்தை பொறுத்தவரை, நம்மகிட்ட இருக்குற எண்ணமே தப்பு. `பளிச்’ `வெள்ளை’ போன்றதெல்லாம்தான் அழகுன்னு சொல்றது தப்பு. இந்தியாவின் நிறம் அது இல்ல. எப்படி மேற்கத்திய நாடுகளுக்கு சென்று `நீங்க ஏன் வெள்ளையா இருக்கீங்க? வெள்ளையா இருந்தா அது நோய்ப் பாதிப்புகான அறிகுறி. அதை மாத்திக்கங்க’னு லாம் சொல்லமுடியாதோ... அப்படித்தான் கருப்பா, மாநிறமா இருக்க இந்தியர்கள் கிட்டயும் `உங்க நிறம் இப்படி இருக்கது ஏன்? மாத்திக்கங்க’னும் சொல்லக்கூடாது” என நிறவெறிக்கு எதிராக தனது குரலை பதிவு செய்தார்.

சாய் பல்லவி சொன்ன அதே கருத்தை, சில வருடங்களுக்கு முன்னர் பாலிவுட்டின் முன்னனி நடிகர் ரன்பீர் கபூரும் சொல்லியிருந்தார். சுமார் 9 கோடி மதிப்பிலான ஒரு Fairness cream விளம்பரப் படத்தை, நிறவெறியை தூண்டுவது போல உள்ளது என்ற காரணத்துக்காக ரன்பீர் கபூர் தவிர்த்திருந்தார். நடிகர் ரன்தீப் ஹூடாவும், “இந்திய நாட்டையே அழகு என்ற சொல் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வெள்ளை தான் அழகு என்பதெல்லாம் அதோட நீட்சிதான். உலகமே சூரியத்துக்கு அடியில் சன் பாத் எடுக்கையில், இவர்கள் இன்னும் வெள்ளையாக க்ரீம் விற்கின்றார்கள். இது தவறு. இப்படி நிறத்தை வைத்து ஒருவரை பிரித்துப்பார்ப்பதென்ற கோட்பாட்டையே ஒழிக்க வேண்டும்” என்றார். சொந்தமாக குதிரைப் பண்ணை வைத்திருக்கும் நடிகர் ரன்தீப் ஹூடா, தனக்கு அந்தப் பண்ணையை பராமரிக்க நிறைய பணம் தேவைப்படுவதாகவும், இருந்தபோதிலும் தான் இப்படியான விளம்பரங்களில் நடிக்கபோவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்திருந்தார்.

வட இந்திய நடிகர்களை பொருத்தவரை, அமிதாப் பச்சன் `பெப்சி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என சொல்லியிருந்தார். அதன் காரணமாக “என்னிடம் ஒரு சிறுமி ஒருமுறை வந்து `எங்க டீச்சர் பெப்சிலாம் விஷம்னு சொன்னாங்க... நீங்க ஏன் அதுக்கு ப்ரொமோட் பண்றீங்க’னு கேட்டாள். அதைக்கேட்ட பிறகு, அந்நிறுவனத்தின்மீது மக்களுக்கு இப்படியான எண்ணம்தான் இருக்குனு புரிஞ்சு, நான் அந்த விளம்பரங்கள்ல நடிக்கிறதை விட்டுட்டேன். எப்படி நான் புகையிலை, மது போன்றவையெல்லாம் எடுத்துக்கிறதில்லையோ... அப்படித்தான் இதுவும். அதனால் நான் செய்யாத விஷயத்தை மக்கள்கிட்ட கொண்டு போகக்கூடாதுன்னு நினைச்சிட்டேன்” என்று சொல்லியிருந்தார்.

அமிதாப் பச்சனை பெப்சி விளம்பரத்தை தவிர்த்தது போல, பாலிவுட் நடிகர் அமிர்கான் ஒரு ஆடம்பர கார் விளம்பரத்தில் நடிக்க மறுத்திருந்தார். எளியவர்கள் மத்தியில் செல்வதே போதுமானது, சமூக ஆர்வலராக இருப்பதே போதும் என்பதற்காகவே தான் இந்த முடிவை எடுப்பதாக அமீர் கான் சொல்லியிருந்தார். 2013-ம் ஆண்டு, எளியோரின் வலியை பேசிய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகையில் `ஆடம்பர பொருட்கள் விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை’ என்ற இந்த முடிவை அமிர் கான் எடுத்திருக்கார். இப்போ அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்ட போதிலும்கூட, தான் எடுத்த முடிவுல உறுதியா இருக்கார் அமீர்! இவர்களை போலவே நடிகர் அக்‌ஷய் குமாரும் தான் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனக்கூறியிருந்தார். இருந்தபோதிலும் அவர் சமீபத்தில் அப்படியான ஒரு விளம்பரத்தில் நடித்து சர்ச்சைக்குள் சிக்கினார். தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்கள் வழியாக பலத்த எதிர்ப்பு வந்ததால் அந்த ப்ராஜெக்டிலிருந்து விலகிய சம்பவம் நடந்தது.

இவர்களைப் போலவே பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம், மது - புகையிலை பொருட்களில் நடிப்பதில்லை எனக் கூறி அந்த விளம்பரங்களில் நடிப்பதை ஏற்க மறுத்தார். அவர் ஃபிட்னெஸ் ஆர்வலர் என்பதால் இம்முடிவை எடுத்ததாவும் தகவல்கள் வெளியானது. இதேபோல நடிகை சன்னி லியோன், தான் எவ்வித புகையிலை பொருட்களிலும் நடிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

அது சரி... இவ்வளவு பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் பத்தியே சொல்றீங்களே.... தமிழ்ல நம்ம கோலிவுட்ல இதுவரை இப்படி எந்த நடிகரும் புகையிலை, மதுவுக்கு எதிரா பேசியதில்லையா என நீங்க கேட்பதே எங்களுக்கு புரியுது. டோலிவுட்டை பொறுத்தவரை, இப்போ எந்த நடிகரும் இப்படியான விளம்பரங்கள்ல நடிக்கிறதே இல்ல பாஸ்! நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற உச்சநட்சத்திரங்கள் தொடங்கி இந்தத் தலைமுறை புது நடிகர்கள் வரை யாருமே அப்படியான விளம்பரப்படங்களில் இங்கே நடிப்பதில்லை. ஆக்சுவலி இங்க மது, புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு விளம்பரங்களே வருவதில்ல. அந்த வகையில் டோலிவுட் எப்பவுமே கெத்துதான். 

ஒரேயொரு சோகம் என்னனா, Fairness Cream-கள்தான் தவிர்க்கமுடியாத சூழல்ல விளம்பரங்களா வந்த வண்ணமா இருக்கு. அதிலும் பெண்களுக்கான ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்கள் நம்மூரில் அதிகம்! சோப் விளம்பரங்களில்கூட நிறங்கள், பளிச் முகம் போன்றவையே முன்னிறுத்தப்படுவதே இதுக்கு மிகச்சிறந்த உதாரணம். காலப்போக்குல கொஞ்சம் கொஞ்சமா மாறுமென நம்புவோம்! அதுசரி... நம்பிக்கை, அதானே எல்லாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com