நடிகை பானுப்பிரியா வீட்டில் 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக வீட்டில் வேலை செய்த சிறுமி மற்றும் அவரது தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகை பானுப்பிரியா வீட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டு வேலைக்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டார். இதனிடையே சமீபத்தில் சிறுமியை பார்ப்பதற்காக, பானுப்பிரியா வீட்டிற்கு சிறுமியின் தாயார் வந்துள்ளார். இதனையடுத்து பானுப்பிரியா வீட்டில் இருந்து நகை, மற்றும் பணம் காணாமல் போனது. இதுகுறித்து பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே புகார் அளித்த நிலையில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் தந்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக சிறுமியின் தாயார் ஆந்திர காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் தனது மகளுக்கு, பானுப்பிரியாவின் சகோதரர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். தனது மகளை தன்னுடன் அனுப்ப பானுப்பிரியா மறுப்பதாக குற்றம்சாட்டியிருந்த அப்பெண், இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பானுப்பிரியா வீட்டில் 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக வீட்டில் வேலை செய்த அந்த சிறுமி மற்றும் அவரது தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.