70 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆர்.கே ஸ்டுடியோவை விற்பனை செய்வதாக அதன் உரிமையாளர் ரிஷி கபூர் அறிவித்துள்ளார்.
இந்தி சினிமாவில் பெரும் நடிகராக திகழ்ந்த ராஜ் கபூர் 1948ஆம் மும்பை செம்பூர் பகுதியில் ஆர்.கே பிலிம்ஸ் மற்றும் ஸ்டுடியோவை தொடங்கினார். இந்த ஸ்டுடியோ தொடங்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ராஜ் கபூர் மறைவிற்குப் பிறகு ஆர்.கே ஸ்டுடியோவை அவரது மகன்கள், ரன்தீர் கபூர், ரிஷி கபூர் மற்றும் ராஜீவ் கபூர் நிர்வாகித்து வருகின்றனர். இங்கு ஸ்ரீ 420, ஏக் தின் ரத்ரே, பூட் பாலீஸ், ராம் டெரி கங்கா மெய்லி, ப்ரேம் ரோக் போன்ற பல வெற்றித் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு ஆர்.கே ஸ்டுடியோவில் பெரிய தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஸ்டுடியோ நிலை குலைந்துவிட்டது. டிவி நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் நடத்தும் சில முக்கிய அரங்கங்கள் தீயில் சேதமடைந்துவிட்டன. இதன் பின்னர் அந்த ஸ்டுடியோவின் வருவாய் படிப்படியாக குறையத்துவங்கிவிட்டது. இழப்புகள் அதிகமாகி, வருவாய் குறைந்ததால், ஸ்டுடியோவை நிர்வகிப்பது சிரமமானது.
இந்நிலையில், ஆர்.கே ஸ்டுடியோவை விற்கும் முடிவுக்கு கபூர் குடும்பத்தினர் வந்துள்ளனர். இதுதொடர்பாக கூறியுள்ள ரிஷி கபூர், “ஆர்.கே ஸ்டுடியோவை சீரமைப்பு செய்யும் அளவிற்கு வருமானம் இல்லை. தீவிபத்து ஏற்படுவதற்கு முன்புவரை ஆர்.கே ஸ்டுடியோ பெரிய வெள்ளை யானை போன்று இருந்தது. தற்போது அதெல்லாம் சேதமாகிவிட்டது” என தெரிவித்துள்ளார். அத்துடன் ஆர்.கே ஸ்டுடியோவை தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்துவிட்டதாகவும், தீவிபத்திற்கு பிறகு இலவச பார்க்கிங்க், குளிர்சாதன வசதி, சலுகைகளை அனைவரும் கேட்பதாக கூறியுள்ளார்.