’நான் ஏன் இதில் சேரவேண்டும்?’ நடிகர் சங்கத்தை விளாசும் ஹீரோயின்!

’நான் ஏன் இதில் சேரவேண்டும்?’ நடிகர் சங்கத்தை விளாசும் ஹீரோயின்!
’நான் ஏன் இதில் சேரவேண்டும்?’ நடிகர் சங்கத்தை விளாசும் ஹீரோயின்!
Published on

மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் தான் ஒருபோதும் இணையப் போவதில்லை என்று நடிகை ரிமா கல்லிங்கல் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை மலையாள நடிகர் சங்கத்தில் நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் இன்னொசன்ட், திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கினார். பின்னர் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், பார்வதி, பத்மப்பிரியா ஆகியோர் இணைந்து திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். 

இந்நிலையில் ’அம்மா’வுக்கு புதிய தலைவராக தேர்வான மோகன்லால், நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார். இதற்கு திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நடிகரை எப்படி சேர்க்கலாம் என்ற அவர்கள், அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினர். 

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் அவரை நிரந்தரமாக, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்காக சங்க விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நடிகர் சங்கம் பதில் ஏதும் சொல்லவில்லை. இதற்கிடையே, சங்கத்தின் செயல்பாட்டை கண்டித்து, நடிகைகள் ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிகர் சங்கத்தில் விலகினர்.

இந்நிலையில் நடிகர் திலீப், நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக மோகன்லாலுக்கு கடிதம் அனுப்பினார். அதுகுறித்து நடிகர் சங்க பொதுக் குழுவில் பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சித்திக், நடிகர் சங்கத்தில் விலகிய நடிகைகளை மீண்டும் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி மாத்ரூபூமி மலையாள இதழுக்கு நடிகை ரீமா கல்லிங்கல் அளித்துள்ள பேட்டியில், ’நான் ’அம்மா’வில் இல்லை. மீண்டும் அதில் இணைய போவதில்லை. பாலியல் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட நடிகரை பாதுகாக்கும் இந்த அமைப்பில் நான் ஏன் இருக்க வேண்டும்? ஒரு நோக்கமும் இல்லாமல் இதில் ஏன் நான் இணைய வேண்டும்?

அம்மா எனது நலனுக்காகவா இருக்கிறது? என் விஷயங்களை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். ’அம்மா’, ஓய்வு பெற்ற நடிகர்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது. இது போதுமானதாக இல்லை. இப்போதும் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களின் பிரச்னை பற்றியும் அது பேச வேண்டும். இந்த அமைப்புக்கு வெளியே இருந்து பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அப்போது எனக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com