Rewind 2023: ரஜினி முதல் சந்தானம் வரை.. நடிகர், இயக்குநர்களுக்கு கம்பேக்காக அமைந்த திரைப்படங்கள்!
ஜெயிலர்
நடப்பு ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் அது ஜெயிலர் எனலாம். நெல்சன் திலிப்குமார் - ரஜினிகாந்த் கைகோர்த்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 600 கோடி ரூபாய் வசூலையும் கடந்தது. கடைசியாக பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சனுக்கும் சரி, அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிக்கும் சரி, ஜெயிலர் கம்பேக் படமாக அமைந்தது.
மாவீரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு நல்ல வெற்றிப்படமாக அமைந்தது மாவீரன். இதுபோன்ற வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படமான பகீரா படுதோல்வியை சந்தித்த நிலையில், மார்க் ஆண்டனி படம் அவருக்கும், விஷாலுக்கும் நல்ல கம்பேக் படமாக அமைந்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
லாரன்ஸிற்கு ருத்ரன் மற்றும் சந்திரமுகி - 2 என்ற அடுத்தடுத்த 2 படங்களும் தோல்விப்படங்களாக அமைந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. அல்லியஸ் சீசர் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த லாரன்ஸிற்கு, அவரது திரைப்பயனத்திலேயே சிறந்த கதாப்பாத்திர தேர்வாக இருந்ததாக கருத்துகள் மேலோங்கின.
டிடி ரிட்டர்ன்ஸ்
குலு குலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் ஆகாத நிலையில், நடிகர் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது டிடி ரிட்டர்ன்ஸ். சந்தானம் தனது ஃபார்முக்கு வந்ததாகவே படத்தை பார்த்தவர்கள் சிலாகித்தனர். தொடர்ந்து தனது படங்களில் ஒன் லைன் பஞ்ச் அடிக்கும் சந்தானம், இதிலும் பிரித்து மேய்ந்திருந்தார்.
மாமன்னன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன், வடிவேலுவுக்கு ஆகப்பெரும் கம்பேக் படமாக அமைந்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நினைத்த வடிவேலுவுக்கு, மாமன்னன் பாத்திரம் பெயரை அள்ளிக்கொடுத்தது. ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி என்பதுபோல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு குணச்சித்திர பாத்திரத்தில் கலக்கியிருந்தார் வடிவேலு.
சித்தா
மிகவும் உணர்ச்சிகரமாக கதையைக் கொண்ட சித்தா படம் நடிகர் சித்தார்த்தின் திரைப்பயணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் நாயகனாக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் ஏகப்பட்ட நல்ல பெயரை வாங்கி குவித்துள்ளார் சித்தார்த்.
இறுகப்பற்று
2015ம் ஆண்டு எலி என்ற படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனின் வெற்றிகரமாக படைப்பாக அமைந்தது இறுகப்பற்று. 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே எலி படத்தி தோல்வி குறித்து பேசிய யுவராஜ், படத்தின் PRESS SHOW-ன் போது, எப்படி இருந்தது என்ற பத்திரிகையாளர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் மௌனம் காத்தனர். அவர்களின் மதிப்புமிக்க 3 மணி நேரத்தை வீணடித்தற்காக நான் மிகவும் வருந்தினேன் என்று கூறியிருந்தார். ஆனால், இறுகப்பற்று படமோ நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
அயோத்தி
அயோத்தி மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த கதையை எந்தவித பிரச்சார நெடியும் ஏறாமல் படமாக எடுத்த இயக்குநர் மந்திரமூர்த்திக்கு பாராட்டுகள் குவிந்தன. நடிகர் சசிகுமாருக்கும் நல்ல பெயரை கொடுத்தது அயோத்தி.