மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவிற்கே புதிய விசயமாக அவர் கொண்டுவந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனது, இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதை வெறும் பேச்சோடு நிறுத்திவிடமால், கைதி, விக்ரம் மற்றும் லியோ என மூன்று திரைப்படங்களையும் அவருடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்குள் இணைத்து கொண்டுவந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், அவருடைய அடுத்தமான ‘கூலி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவருகிறார்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் நடித்து வருகிறார். உடன் ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் முதலியோர் சேர்ந்து நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், தற்போது லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தில் அமீர்கான் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையும் அமீர்கான் செயல்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, பாலிவுட் நடிகரான அமீர்கான் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அதற்கான தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாகவும், படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெலுங்கு திரைப்படங்களுக்கான நம்பகமான போர்டலாக செயல்பட்டு வரும் ஆகாசவாணி அவர்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் “அமீர்கான், லோகேஷ் மற்றும் மைத்ரி மூவீஸ் மூன்றுபேரும் விரைவில் பான் இந்தியா படத்திற்காக இணைவதற்கான முன்கூட்டிய விவாதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தசெய்தி வைரலாகிவரும் நிலையில், அமீர்கானின் தரமான கம்பேக்கை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.