”கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்விச்செலவு, உடனடி நிவாரணம் உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்பின் செயல்படுத்தப்படும் முறை பற்றிய ஆணைப்படிவம் வெளியிடவேண்டும்” என்று இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன், ”முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. கொரோனா பாதிப்பில் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய நிறைய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி கண்டுள்ளீர்கள்.. செயல்படுத்தும் முறை பற்றிய ஆணைப்படிவம் வெளியிட்டால் எங்களால் அப்படிப்ப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்டி உதவ முடியும். நன்றி சார்” என்று வாழ்த்துகளோடு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை அளிக்கப்படும் என்றும், இந்த ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். குழந்தைகள் வளர்ச்சியை கண்காணிக்க ஒரு சிறப்புக்குழுவையும் முதல்வர் நியமித்துள்ளார்.