பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவில் நடை அடைக்கும்போது, ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் ஹரிஹராசனம் பாடலை மறு பதிவு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
பாடகர் ஜேசுதாஸ் குரலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நடை அடைக்கும்போது இரவில் ஒலிக்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் சுவாமி என்ற வார்த்தையை சேர்க்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இந்த பாடலின் ஒரு வரியை சேர்த்து பாடிவிட்டதாகவும், அந்த பிழையை சரி செய்வதற்கு தேவஸ்வம் போர்டு முன் வந்தால், பாடலை திருத்தி பாடி தருவதாகவும் ஜேசுதாஸ் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஹரிஹராசனம் பாடலை திருத்தங்களுடன் மறு பதிவு செய்ய தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஹரிஹராசனம் பாடலை ஜேசுதாஸ் மீண்டும் தனது குரலில் பாடி பதிவு செய்யவுள்ளார்.