பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளையாட்டாக ரசிகர்கள் மீது பாய்ந்ததால் சிலர் காயமடைந்தனர்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங். ‘சஞ்சை லீலா பஞ்சாலி’, ‘பாஜிரோ மஸ்தானி’,‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். ரன்வீரை பொறுத்தவரை படப்பிடிப்புகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி அதிகம் விளையாட்டுத்தனம் கொண்ட நபர். பல இடங்களில் இவரது செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு புதிய சர்ச்சையில் ரன்வீர் சிக்கியுள்ளார்.
மும்பையில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில், பாடல் காட்சிக்கு ரன்வீர் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு என்பதால் சினிமா நடிகர்களை காண அங்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். அத்துடன் ரன்வீரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்தவுடன், ரசிகர்கள் இருக்கும் திசை நோக்கி ரன்வீர் ஓடிவந்தார். அங்கு வந்ததும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களை பார்த்து கூச்சலிட்ட ரன்வீர், திடீரென மேடையில் இருந்து பாய்ந்து அங்கிருந்த ரசிகர்கள் மீது குதித்தார். தன்னை பிடித்து கைகளில் தூக்கிக்கொண்டு செல்வார்கள் என எண்ணி குதித்த ரன்வீருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. ஏனென்றால், அவர் குதிப்பதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அவரைப் பிடிக்க முடியவில்லை. எனவே ரன்வீரை தரையில் விட்டனர். அத்துடன் அவர் குதித்ததால் சிலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கூட்டத்தில் நின்று காயம்பட்ட பெண் ரசிகை ஒருவர் கூறும்போது, “நான் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர் குதிப்பார் எனத் தெரியாததால், அவரை பிடிக்க நான் முயற்சிக்கக்கூட இல்லை. அவர் குதித்ததில் என் கழுத்தப்பகுதி சுலுக்கிக் கொண்டது. ரன்வீர் சிங் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ளாமல் இருக்க வேண்டும்” எனக் கண்டிப்புடன் பேசினார்.