தனது வீட்டில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிவருவது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராணி முகர்ஜிக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி. இவர் தமிழில் கமல்ஹாசனின் ’ஹே ராம்’ படத்தில் நடித்திருந்தார். இவரது பங்களா, மும்பை ஜூஹு பகுதியில் இருக்கிறது. இவர் வீட்டில் மேலும் ஒரு மாடி எழுப்பப்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் கூறினர். அனுமதியின்றி இந்தக் கட்டிடம் கட்டப்படுவதாக மும்பை மாநகராட்சிக்கும் சிலர் புகார் மனு அனுப்பினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர்.
ஆனால் ராணி முகர்ஜியின் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்த மும்பை மாநகராட்சி அதிகாரி பிரஷாந்த் கெய்க்வாட், ‘மும்பை மாநகராட்சி சட்டம் 488-ன் படி கட்டிடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.
‘பங்களாவின் உயரம் விதிமுறைகளை மீறி அதிகரிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் கட்டப்பட்டு வருகிறது’ என்று ராணி முகர்ஜியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.