ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். புனேவில் கடந்தவாரம் தொடங்கிய படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா,பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்தனர். யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், படத்தின் வில்லனாக நடிகர் ராணா நடிக்கிறார் என்றும் தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, ’பாகுபலி’படத்தில் பல்வாள்தேவனாக ராணா வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். பிரபாஸ் எப்படி கவனம் ஈர்த்தாரோ அதே அளவுக்கு பல்வாள்தேவனாக நடித்த ராணாவும் கவனம் ஈர்த்தார். தற்போது, அட்லீ - ஷாருக்கான் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.