ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு வரிசை நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல் எப்படியோ மக்களுக்கு சென்று சேர்ந்தால் நல்லது. இளைய தலைமுறையினரின் கைகளில் சாலமன்பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல் இருக்க வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை.
நான் விழாவுக்கு வந்து பார்வையாளனாக இருக்கிறேன் பேசவில்லை என்று கூறினேன். புத்தக முன்னுரை படித்த உடன் இந்த புத்தகத்தை பற்றி பேச கூடாது என்று முடிவு பண்ணிட்டேன். சில புத்தகங்களை படிப்போம். சிலவற்றை எடுத்து கொடுத்து விடுவோம். சில புத்தகத்தை படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்போம். அதுபோல் இந்த புத்தகத்தை நான் எடுத்து வைத்துவிட்டேன்.
ஸ்டாலின் முதல்வர் ஆனதும் புறநானூறு புதிய வரிசை நூல் நூலகங்களில் வைக்கப்படும் என சிவா கூறினார். பாண்டியராஜன் பதறி போய்விட்டார். புறநானூறு புதிய வரிசை நூலை நாங்களே நூலகங்களில் வைத்து விடுகிறோம் என பாண்டியராஜன் கூறினார். இந்த நூல் எல்லா நூலகங்களிலும் இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. மகிழ்ச்சி.
காலம் பேசாது. ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும். முதன் முதலில் சாலமன் என்னை பற்றி பேசும்போது இலக்கியம் பற்றி பேசிய வாய் இந்த ரஜினிகாந்த் பற்றியும் பேசியது எனக்கு மிகப் பெரிய பெருமை. இலக்கிய கடலில் முத்து எடுக்குற அறிவு சாலமனுக்கு உண்டு. அவர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.