ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த், அவருடன் இணைந்து பாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக உருவெடுத்து 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான அரங்கில் கண்கவரும் நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ரஜினி பாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் உள்ள மக்களை இசை வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றார். பின்னர் தமிழ், இந்தி, ஆங்கிலம் என உலகளவில் பிரபலமான இசையமைப்பாளராக பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றார். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாரிக்குவித்தார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. இசைப் பிரியர்களின் இசைப்புயலாக திகழும் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளராக உருவெடுத்து 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.