நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும், மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார்.
திரையுலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமும், மரியாதையும் ஒப்பிட முடியாதது. மறுக்க முடியாதது. குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பில், அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் எற்பட்டால் அது ரஜினிகாந்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில், அவரது பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரப ;படம், கலைப் படம், கணினி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய படம் உள்ளிட்டவற்றை பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அவரது கவனத்திற்கு வந்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கும், அவர்களின் தளம் மற்றும் ஊடகத்தை அணுகுவதற்கும் பொதுமக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனித்துவம் வாய்ந்த ரஜினிகாந்தின் படம், பெயர், புகைப்படங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றை அவர் அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது, பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ரஜினிகாந்தின் ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் அதாவது அவரது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உள்ளிட்டவற்றில் உள்ள உரிமைகள் எதையும், யாராவது மீறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.