மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜனிகாந்த் இன்று அதிகாலை 2:40 மணிக்கு சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார். சென்னையிலிருந்து தோஹா சென்ற அவர், அங்கிருந்து ரோஜெஸ்டர் நகர் சென்றார். அங்கு சென்று ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த், 21ஆம் தேதி தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் ரோஜெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் (22, 23) அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி 15 நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டார். அந்த சமயத்தில் அமெரிக்காவிலுள்ள பல ரசிகர்களையும் சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். 15 நாட்கள் ஓய்வுக்கு பின் கடந்த 6-ம் தேதி மயோ கிளினிக் மருத்துவமனையில் இறுதி பரிசோதனை செய்து கொண்ட ரஜினிகாந்த், மீண்டும் சென்னை புறப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம், 'மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது' என்று ரஜினிகாந்த் கூறினார்.
2016-ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு மயோ கிளினிக் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரில் வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படியே தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
இதையடுத்து 5 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும். சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குபின் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
- செந்தில்ராஜா. இரா