‘காலா’ படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் வெளியாகி உள்ளது.
‘கபாலி’யை அடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துவரும் திரைப்படம் ‘காலா’. இதனை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இதில் ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டில் என பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிய வருகிறது. படப்பிடிப்புக்கு முன்பே எல்லா நட்சத்திரங்களுக்கும் ஒத்திகை பயிற்சி கொடுக்கப்பட்டதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிக வேகமாகவே முன்னேறி வருகிறது.
ஷங்கரின் ‘2.0’ படத்தின் ரிலீஸ் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதற்கு கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியாததே காரணம். எனவே, அந்த இடைவெளியை பயன்படுத்தி ‘காலா’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என பேச்சுக்கள் வலம் வர தொடங்கியுள்ளன. இதனையடுத்து தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் ஒரு விளக்கத்தை அறிவித்திருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “காலா பொங்கலுக்கு வெளிவரும் என்ற செய்தி பொய்யானது” என பதிவிட்டுள்ளது.