பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கஸ்தூரி ராஜாவின் கடனை அடைக்க ரஜினி நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ரா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.
போத்ரா தமது மனுவில், “2012ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னிடம் கடன் வாங்கினார். நான் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றாலும், என்னுடைய சம்பந்தி ரஜினிகாந்த் கடனை அடைத்துவிடுவார் என்று எழுதிக்கொடுத்திருந்தார். பின், கடன் தொகையை திருப்பிக்கொடுக்க காசோலை ஒன்றை கஸ்தூரி ராஜா கொடுத்தார். அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
ரஜினி வீட்டுக்கு விவரத்தைச் சொன்னேன். ஆனால், பலர் ரஜினியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது போல கஸ்தூரி ராஜாவும் செய்திருக்கிறார் என்று பதில் வந்தது. கஸ்தூரி ராஜா மீது போலீஸில் புகார் செய்தேன். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று சந்தேகிக்கிறேன். இதனால், தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய சம்பந்தி கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்தப் பதில் மனுவில், எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உகந்ததல்ல என்று ரஜினிகாந்த் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுத்தமான கரங்களுடன் போத்ரா நீதிமன்றத்தை நாடவில்லை. எழும்பூர் நீதிமன்றத்தில் போத்ரா முறையாக ஆஜராகததால்தான் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில்தான் அளித்த விளக்கத்தை போத்ரா மறைத்துள்ளார். போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.