நடை, உடை, பாவனை என்று மக்களைக் கவர்ந்த ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 47 வருடமாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். இன்றளவும் அவருக்கான ஹைப் குறையவில்லை. இன்றைக்கும் அவரது FDFS-க்கு டிக்கெட் கிடைப்பது சிரமம். 47 வருடமாக தனது க்ரேஸ் குறையாமல் மின்னும் சில ஸ்டார்களில், இவர் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாரே..
சிறுவயதில் உடல்நிலைக் குறைவாக இருந்த தனது தாயை இழந்த ரஜினியை, அவரது தந்தை தன் மகன் கர்நாடக காவல்துறையில் உயர் அதிகாரியாகவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடினார். வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போகவே, உறவினரின் உதவியால் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் பணி கிடைத்தது.
கண்டக்டராக இருந்த காலங்களில், ஸ்டைலாக தலைமுடியை அடிக்கடி கலைத்துவிட்டுக் கொள்வது, வேகமாகவும் ஸ்டைலாகவும் நடப்பது, சிகரெட்டை ஒன்றை வீசி வாயில் பிடிப்பது, எரியும் சிகரெட்டை அப்படியே நாக்கால் மடக்கி வாயிக்குள் தள்ளி, மீண்டும் வெளியே கொண்டு வருவது போன்று பல ஸ்டைலான விசயங்கள் செய்து பயணிகளின் கவனத்தை ஈர்ப்பாராம். இந்த சிகரெட்டை பயிற்சி செய்யும் போது நாக்கு பலமுறை வெந்துயும் போயிருக்கிறது என்று பின்னாளில் ஒரு பேட்டியில் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ரஜினி.
எப்படியாவது நடிகராக வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக பதிந்துகிடந்ததனால், கண்டக்டராக தனது வாழ்க்கையைத் தொடர முடியவில்லை எனவே தமிழ்நாட்டு திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அந்தக் கல்லூரிக்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் விருந்தினராக வந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரஜினி, பாலச்சந்தரை சந்திக்கிறார். பின் ரஜினியின் நடிப்பு திறனை அறிந்த கே.பாலச்சந்தர், அவருக்கு வாய்ப்பளித்தார்.
ரஜினியின் அழகை இயக்குநர் மகேந்திரன் கண்கொண்டு எப்போதும் ரசித்திடவேண்டும் என்று சொல்வோர் உண்டு. ஆனால் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கண்கள் தான் முதலில் ரஜினியை ரசித்திருக்கிறது.
தமிழ் கற்றுகொண்ட ரஜினி
ரஜினியிடம், ”நீங்க மட்டும் தமிழ் நல்லா பேச கத்துக்கிட்டா.. நான் உங்கள எங்கேயோ கொண்டு போவேன்" என்று பாலச்சந்தர் கூறியதும் சற்றும் யோசிக்காமல் தமிழ் பேச கற்றுக்கொண்டார் ரஜினி. கே.பாலச்சந்தரும் அவரின் சொன்னதை செய்துக்காட்டினார். ஆம். சிவாஜி ராவ்வை, ரஜினிகாந்த்காக உருமாற்றினார்.
மூன்று முடிச்சு திரைப்படத்துக்குப் பிறகு தமிழ்சினிமாவின் பிரபலமான வில்லனாக வலம்வந்த ரஜினியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. வில்லனாக நடித்துவந்த ரஜினியின் திரைப்பயணத்தில் ’புவனா ஒரு கேள்விக்குறி' திருப்புமுனையாக அமைந்தது. சிறந்த வில்லன், சிறந்த ஹீரோவாக உருவானார். குளிரும் நெருப்பும் இணைந்தவர்தான் ரஜினி என்பார்கள். அதற்கேற்ப எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் நாயகன் என்று தமிழ்த்திரை உலகம் கொண்டாடத் தொடங்கியது. 1978-ல் ரஜினிக்கான வருடமாகவே அமைந்தது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 படங்களில் நடித்தார். கூடவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் ஸ்டாரானார்.
Star to Super Star
பிரபலமான ஸ்டாரை சூப்பர் ஸ்டாராக மாற்றின ஒரு புள்ளி இருக்கவேண்டும் அல்லவா? அந்த புள்ளி தான், கலைஞானம் இயக்கிய 'பைரவி' படம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற ரஜினி சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார்.
நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நகைச்சுவையான நடிப்பு, '16 வயதினிலே' படத்தில் கம்பிளீட் வில்லன், 'ஆறிலிருந்து அறுவது வரை' படத்தில் பக்கா செண்டிமெண்ட் ஹீரோ, ‘பில்லா’ படத்தில் இரட்டை வேடம் என்று ரஜினி ஒரு கம்பிளீட் சினிமா மெட்ரீயல்.
ரஜினி ஒரு காதல் மெட்டீரியல்
ரஜினிக்கு எந்தவொரு கதாபாத்திரம் பொருந்தினாலும் கூட ரஜினி ஒரு காதல் மெட்டீரியல். அதை சரியாக கண்டுகொண்ட இயக்குநர்கள் சிலரே.. ரஜினிக்குள் இருக்கும் மாஸ் ஸ்டைல் ஹீரோ, பக்கா வில்லன் தாண்டி ரஜினிக்குள் இருக்கும் ரொமாண்டிக் ஹீரோவை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது, ‘ஜானி படத்தில் இயக்குநர் மகேந்திரனும், புதுக்கவிதை படத்தில் இயக்குநர் எஸ். பி. முத்துராமனும், கபாலி படத்தில் பா.ரஞ்சித்தும் மட்டுமே. இயக்குநர் மணிரத்னம் தளபதி படத்தில் கரடுமுரடான வில்லனுக்குள் இருக்கும் காதலில் ரஜினியை சரியாகப் பயன்படுத்தி இருப்பார். இந்த நான்கு க்ளாசிக் படங்கள் போதும் தானே ரஜினி ஒரு ரொமாண்டிக் ஹீரோ மெட்டீரியல் என்று கொண்டாட.
கமல் எடுத்த சரியான முடிவு
’’ நாம் இருவரும் ஒன்றாக நடித்து வந்தால் தனித்துவம் வெளிவராது என அன்று கமல் செய்த செயல் இருவருக்குமே நல்ல முடிவானது. அன்று முதலே ரஜினி-கமல் ரசிக யுத்தம் தொடர்ந்தாலும், அதை இருவருமே உரமாகிக்கொண்டார்கள். இன்று வரை அவர்களது நட்பில் எந்தவொரு சலனமும் ஏற்பட்டதில்லை.
90-கள் முதல் ரஜினியின் ஸ்டைலும் அதற்கு மாஸ் கூட்டும் இசையையும் பார்த்து வளர்ந்த எங்களைப் போன்ற 90-ஸ் கிட்ஸ் #47YearsOfRajinism எல்லாம் கிடையாது.. We are always RAJINIFIED தான்!
எழுத்து - அபிநயா. கே