இத்தாலி அரசு வேண்டுகோளை அந்த மக்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள்.. நாம் அப்படி இருக்கக் கூடாது என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே நாளை நாடு முழுவதும் பேருந்துகள், ரயில் சேவைகள் என அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்படும் என அறிவித்துள்ளனர். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை முழு சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிடலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்.
இதே மாதிரி இத்தாலியில் கொரோனா தாக்கம் 2வது கட்டத்தில் இருந்த போது அரசாங்கம் அந்நாட்டு மக்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் அதனை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. உதாசினப்படுத்திவிட்டார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியானது. அதே மாதிரி நிலைமை நம் இந்தியாவிற்கு வந்துவிடக் கூடாது. ஆக, இளைஞர்கள் பெரியவர்கள் என எல்லோருமே 22 ஆம் தேதி நடைபெற உள்ள ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பைத் தர வேண்டும்.
இந்தக் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க டாக்டர்கள், நர்சஸ் எல்லோருமே அவர்களின் உயிரையும் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேவையை நாம் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாம் பாராட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.