தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இன்றுவரை வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாய் வரும் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல், கரிஸ்மா மற்றும் போலீஸ் மிடுக்குடன் அதகளமாக காட்சியளிக்கிறார்.
சமீபத்தில் வெளியான வேட்டையன் பட பாடலான ‘மனசிலாயோ’ ரீல்ஸ் மெட்டீரியலாக மாறி ரசிகர்களை கவர்ந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டீசர் முன்னோட்டத்தையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
அதில், ”என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்வதுதான் ஹீரோயிசமா?” என்ற கேள்வியை அமிதாப் பச்சன் கூறும் நிலையில், அதற்கு நேர் எதிராக “என்கவுன்ட்டர் செய்றது குற்றம் பண்றவங்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டுமில்ல, இனிமே யாரும் அதுபோலான குற்றத்தை செய்யக்கூடாதுன்றதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்னும் வசனத்தை ரஜினிகாந்த் கூறினார். இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தின.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டிரெய்லரை பொறுத்தவரையில், அடுத்தடுத்து கொலைக்குற்றங்கள் நடந்து காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியாத நிலையில், ‘குற்றவாளியை ஒரு வாரத்துல என் கவுண்ட்டர் பண்ணனும்’ என்ற பொறுப்பு ரஜினிகாந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து வில்லன் மற்றும் காவல் அதிகாரி (ரஜினி) இடையே கேட் அண்ட் மவுஸ் போட்டியாக படம் மாறுகிறது. யார் வில்லன்? அவரை ரஜினி என்ன செய்தார்? அதற்கு இடையில் ரஜினிக்கு என்ன நடந்தது? என்பது போலான திரைக்கதையை வேட்டையன் கொண்டுள்ளது. இவை அனைத்தும் என்கவுன்ட்டரை மையப்படுத்தியே நிகழ்கிறது.
படத்தில் இரு துருவங்களாக அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இருக்கின்றனர். இந்திய போலீஸ் அகாடமியில் உயர் பொறுப்பில் இருக்கும் அமிதாப் பச்சன், “அநீதியை நீதியாலதான் வெல்லனும், இன்னொரு அநீதியால இல்ல” என்ற வசனத்தை பேசுகிறார். அதற்கு நேர் எதிராக, “அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்குறதவிட, அதிகாரத்த கைல எடுக்குறது தப்பில்ல” என்ற வசனத்தை ரஜினிகாந்த் பேசுகிறார். இருவரும் நேருக்கு நேராக பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது.
ஜெய்லரில் குறைந்த காட்சிகளே காவல் அதிகாரியாக வரும் ரஜினி வேட்டையனில் படம் போலீஸ்தான். சமீபத்தில் தமிழகத்தில் என்கவுன்ட்டர் செய்வது பேசுபொருளாக இருக்கும் நிலையில், வேட்டையன் திரைப்படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.