தன் கனவுப் படமான ராணா பற்றிய அறிவிப்பை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்புகூட 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் முதல் நாள் படப்படிப்பில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், படப்பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு ராணா படத்தின் கதையை ரஜினி விவரிக்கச் சொன்னதாக கே.எஸ். ரவிக்குமார், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ராணா படத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் அரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்: "எந்திரன், தசாவதாரத்திற்குப் பிறகு ரஜினி அவர்களுக்கும் எனக்கும் ராணா மிகப்பெரிய படமாக இருந்தது. அது வரலாற்று ரீதியானது, சோதனைகள் செய்துபார்க்க அதிக வாய்ப்புகள் கொண்டது. ஆனால் அதைச் செய்யமுடியவில்லை. பிறகு கோச்சைடையானில் வேலை செய்தோம். அது ராணாவுக்கு முந்தைய படமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணாவின் கதையை மீண்டும் யோசிப்பதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. அதற்கான திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டார் ரவிக்குமார். ஆறு மாதங்களுக்கு முன்பு இயக்குநரிடம் பேசிய ரஜினிகாந்த், இப்ப நம்மால பண்ண முடியுமா? என்று கேட்டுள்ளார். "நான் செய்யமுடியும் என்றேன். ஆனால் அவரது மனம் அரசியலில் இருப்பதால், இதுபோன்ற பெரிய படத்தில் நடிப்பதற்கு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ரஜினி சார் செய்தால் நன்றாக இருக்கும்" என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.