பேட்ட திரைப்படத்தின் பாடல் வெளியீட்டின் போது ரஜினி தன்னை புகழ்ந்தது ஒரு பொக்கிஷம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதி நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீதக்காதி அனுபவம் குறித்தும், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ''நடிகர் ரஜினிகாந்த் என்னை மகாநடிகன் என்று புகழ்ந்தது எனக்குக் கிடைத்த பொக்கிஷம். ரஜினி சார் உதிர்த்த அந்த வார்த்தைகள் என்னுடைய சொந்தம். எங்களைப் போன்றவர்களுக்கு ரஜினி சார், கமல் சார் தான் வழிகாட்டிகள். பேட்ட படப்பிடிப்பில் ரஜினி சார் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் நடிப்புக்கு முன், நான் நினைத்ததைத் தாண்டி வேறொன்றைக் கொடுப்பது மாதிரி ஆகிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, ''சூப்பர் டீலக்சின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை ரொம்பவே நேசிக்கிறேன். அந்த மனுஷன் படத்தில் நடித்தால் நம்மை வைச்சு செய்வார். அதற்குக் காரணம் அவருக்கு சினிமா மீதிருக்கும் காதல் தான்.அவரிடம் மெனக்கெடலும் உழைப்பும் இருக்கும்.
திருநங்கையாக ஒருவர் மாறுவது சாபம் கிடையாது. இந்தச் சமூகம் அதைச் சாபமாக பார்க்கிறது. திருநங்கையாக நடிப்பதற்கு நான் போய் யாரையும் சந்திக்கவில்லை. நான் திருநங்கையாக உணர்ந்து தான் அந்தப் படத்தில் நடித்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சீதக்காதியின் அனுபவம் குறித்து பேசிய அவர், ''சீதக்காதி திரைப்படம் கலைக்கு சமர்ப்பணம். அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி. ஐயா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க முடியுமா என்று ரொம்பவே சந்தேகப்பட்டேன். படமாகப் பார்த்தவுடன் ஓரளவு பண்ணிருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்துருக்கு. ஒரு நடிகனாக நம்பிக்கை சற்று அதிகமாகியிருக்கிறது'' என்று கூறியுள்ளார்.