அண்மையில் மறைந்த பாடகர் எஸ்பிபியுடன் பழகிய பசுமையான நினைவுகளை 'குமுதம்' வார இதழில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அந்த நினைவுக்குறிப்புகளில் இருந்து சில...
"எம். ஆர். ராதா - டி.எஸ். பாலையா - நாகேஷ் என்ற மூன்று பேரோடு நடிக்கும்போது மட்டும் நான் மிக எச்சரிக்கையாக இருப்பேன். கொஞ்சம் விட்டால் ஏதாவது ஒரு எக்குத்தப்புச் செய்து என்னைக் கவிழ்த்துவிடுவார்கள் என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சொன்னதைப்போல, எஸ். ஜானகியோடு பாடும்போது மட்டும் மிக விழிப்போடு இருப்பார். அந்த அம்மையார் எதிர்பாராத சங்கதி போட்டு இவரை இடறிவிட்டுவிடுவார். அடுத்த டேக்கில் அதை முறியடிப்பதற்கு முயற்சி செய்வார். (எடுத்துக்காட்டாக ஆயிரம் தாமரை மொட்டுக்களே, அந்திமழை பொழிகிறது, மலரே மெளனமா?)
கோப்புப் படம்
ரஜினிகாந்துக்குப் பாடும் பாடல்களில் அவர் ஒரு கொண்டாட்டத்தைக் கொண்டுவருவார். ரஜினியின் உடல்மொழிகளின் சாயல்களையும் அவர் பாடும்போதே பார்த்திருக்கிறேன்.
"தியாகராஜ பாகவதருக்குத் தான் நன்றிக்கடன்பட்டவன் என்று டி.எம். செளந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே" என்றேன். "தியாகதராஜ பாகவதர் பாணியிலிருந்து அவரை மீட்டுக்கொண்டு வந்து நவீன முறையில் பாடவைத்த எம்.எஸ். விஸ்வநாதனுக்குத்தான் அவர் மேலும் நன்றிக்கடன்பட்டவர்" என்றார்.
எங்கள் இருவருக்கும் காலம் வகுத்த ஒற்றுமையை என்னென்பது? என் முதல் பாடலை பாடியவர் அவர். கொரோனா குறித்த அவரது கடைசிப்பாடலை எழுதியவன் நான் " என்று பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.