ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்

ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்
ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்
Published on

ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இது குறித்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “எனது தந்தையை நிழல் உலகதாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்தரித்துப் படம் எடுக்கக்கூடாது. நீங்கள் தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினிகாந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.

நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது ‘ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை’ என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com