“என்னை விமர்சிப்பதில் அப்படி என்ன சுகம் உங்களுக்கு” - இன்ஸ்டாகிராம் நேரலையில் கண்கலங்கினார் போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ராகினி திவேதி .
கர்நாடகவில் போதைபொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி திவேதி கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அதனைத்தொடந்து அவர் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 21 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, முதன் முறையாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர் உரையாடினார். அப்போது பேசிய ராகினி ஒரு கட்டத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கு எதிராக சமூகவலைதளங்களில் வெளியான கருத்துக்களை குறிப்பிட்டு கண்கலங்கினார்.
அவர் பேசும் போது, “ என்னையும் எனது குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசுவதில் அப்படி என்ன சுகம் கிடைக்கிறதோ தெரியவில்லை. இருப்பினும் அதனை நான் எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், அவதூறாக கருத்துப்பதிவிட்டவர்கள், அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை மீண்டும் படிக்க வேண்டும்.
அவர்கள் குடும்பத்தினருக்கு இதே போன்று கருத்துக்களை வேறொரு நபர் அனுப்பினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த சம்பவம் கொடுத்த அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நான் மெல்ல குணமடைந்து வருகிறேன். அந்த சம்பவம் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் எனது தூக்கத்தை இழக்கிறேன் . நான் என்னையே வலிமையாகவும், நம்பிக்கை இழக்காமலும் இருக்க உத்வேகம் கொடுத்துக்கொள்கிறேன். உனது அடையாளத்தை நினைத்து பெருமை கொள் என்றும் கூறிக்கொள்கிறேன்.” என்றார்.