ஃபேஸ்புக் முதல் உலக அரசியல் வரை.. துணிச்சலாக களமிறங்கும் ’த்ரிஷா’ - ராங்கியாக ஜொலித்தாரா?

ஃபேஸ்புக் முதல் உலக அரசியல் வரை.. துணிச்சலாக களமிறங்கும் ’த்ரிஷா’ - ராங்கியாக ஜொலித்தாரா?
ஃபேஸ்புக் முதல் உலக அரசியல் வரை.. துணிச்சலாக களமிறங்கும் ’த்ரிஷா’ - ராங்கியாக ஜொலித்தாரா?
Published on

தன் அண்ணன் மகளுக்கு நேரும் ஒரு சிக்கலுக்காக இணையதளத்துக்குள் குதிக்கும் பத்திரிகையாளருக்கு என்னென்ன சிக்கல்கள் உண்டாகிறது என்பதைச் சொல்கிறது இந்த ‘ராங்கி’.

ஆன்லைன் ஊடகத்தில் வேலைப் பார்க்கும் ’தையல்நாயகி’ அசாத்திய துணிச்சல்காரர். ரோந்தில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி பேசும் தகாத வார்த்தைகளை வீடியோவாக்கி தன் துணிச்சலை மீண்டும் சென்னைக்கு எடுத்துரைக்கிறார். வீர தீர செயல்கள் செய்யும் தையல்நாயகிக்கு, எதிர்பார்த்ததைப் போலவே வீட்டில் சுத்தமாய் மரியாதை இல்லை. அண்ணி திட்டித் தீர்க்க, அண்ணன் மகள் மட்டுமே ஒரே ஆதரவு. அப்படிப்பட்ட அண்ணன் மகளுக்கு ஒரு சிக்கல் வர, அந்த சிக்கலுக்காக ஃபேஸ்புக்கில் தையல்நாயகியே சாட் செய்ய நேர்கிறது. சின்னப் பிரச்னை தான் என நம்பி உள்ளே நுழையும் தையல்நாயகி பெரிய லெவல் தீவிரவாத கும்பலுக்குள் சிக்கிக்கொள்கிறார்.

ஓர் இரவில் உள்ளூர் போலீஸ் டூ எஃப்.பி.ஐ. வரை தையல்நாயகி புகழ் பரவுகிறது. யார் அந்த தீவிரவாத கும்பல், தையல்நாயகியின் குடும்பத்துக்கு என்ன ஆனது, உண்மையில் அவர்கள் தீவிரவாதிகள் தானா போன்ற கேள்விகளுடன் முடிகிறது ‘ராங்கி’.

தையல்நாயகியாக த்ரிஷா. உண்மையில் இப்போது யாருமே இங்கு நிஜமான பத்திரிகையாளர்கள் இல்லை, எல்லோரும் வெறுமனே ஏதோவொரு பாதுகாப்பான செய்திக்குள் தங்களை புகுத்திக்கொள்கிறார்கள் என நம்பும் கதாபாத்திரம். கௌரி லங்கேஷ் முதல் ஆண் - பெண் சிக்கல்கள் வரை புரிந்து வைத்திருக்கும் திறமைசாலி. அண்ணன் மகளுக்கு நேரும் ஒரு பாலியல் சார்ந்த பிரச்னையை அவர் டீல் செய்யும் விதம் நன்று. த்ரிஷாவின் அண்ணன் மகளாக அனஸ்வர ராஜன், அண்ணியாக லிஸி, காவல்துறை அதிகாரியாக இயக்குநர் ஜான் மகேந்திரன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் தங்களுக்கு கொடுத்தப் பணியை செய்திருக்கிறார்கள்.

அறிமுகம் இல்லாத நபருடனான ஃபேஸ்புக் சாட் நம்மை எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல்லலாம் என்கிற திடுக்கிட வைக்கும் விஷயத்தை வைத்து உலக அரசியலை பேசியிருக்கிறார் ‘ராங்கி’யை எழுதிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். க்ளைமேக்ஸில் வரும் துப்பாக்கிகள் சூழ் சண்டைக்காட்சியில் ராஜசேகரின் உழைப்பு தெரிகிறது. ஷக்திவேலின் ஒளிப்பதிவும், சுபாரக்கின் படத்தொகுப்பும் பக்கா.

ஒன்லைனாக சுவாரஸ்யமாக இருக்கும் ‘ராங்கி’, திரைக்கதையாகவும், எடுக்கப்பட்ட விதத்திலும் சோதனைக்களமாக மாறியிருப்பதுதான் வேதனை. ஒரு சிறுமியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் அக்கௌண்ட் பயன்படுத்துவது எவ்வளவு அபத்தம் என கிளாஸ் எடுத்துவிட்டு, படம் நெடுக அதையே செய்வது; கௌரி லங்கேஷ் தெரியும், ஆனால் டுனிஷியாவில் என்ன பிரச்னை என தெரியாது; அத்தனை பேர் கொல்லப்பட்ட பின்பும் சீரியஸாகாமல் ரொமாண்டிக் மோடிலேயே சுற்றுவது; எல்லோரையும் பணயம் வைக்கும் அளவுக்கு வந்த பின்னும் வாய்ஸ் ஓவரில் சமூக அக்கறை பேசுவது என முரண்பாடுகளின் மூட்டையாக குவிந்துகிடக்கிறது தையல்நாயகியின் கதாபாத்திரம்.

வெளிப்படையாக சிக்கிக்கொண்ட அமைச்சர் விபத்தில் இறந்தால் சந்தேகம் வருவதில் ஆரம்பித்து, ஆலிம் எப்படி இந்தியா வந்து சென்றார் வரை அத்தனை லாஜிக் அத்துமீறல்கள். வம்படியாக சிக்கிக்கொண்ட பின்பும், மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்வதற்காகவே எழுதப்பட்ட ஜான் மகேந்திரன் கதாபாத்திரம் என சுவாரஸ்ய ஒன்லைனரில் ரோடு லோரைவிட்டு ஏற்றியிருக்கிறார்கள்.

ரொம்பவே ராங்காக இருக்கிறது இந்த ராங்கி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com