திரைப்படத்துறை என்பது ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற 15 பேர் மட்டுமே இல்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஃபெப்சியின் கீழ் 25ஆயிரம் பதிவு பெற்றும், 15 ஆயிரத்துக்கும் மேல் பதிவு பெறாமலும் தொழிலாளர் உள்ளனர். 50ஆயிரம் பேரில் 50 பேர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். திரைப்படத் துறை என்பது ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற 15 பேர் மட்டுமே இல்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் நிலைமையை உணர்ந்து தங்களது சம்பளத்தை குறைப்பார்கள். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொழிலாளர்கள் குடியிருப்பதால் 75 நாட்களாக பணியில்லாமல் உள்ளனர்.
வழக்கமாக இவர்களில் 60% பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்பதே தொழிலாளர்களின் நிலைமை. சின்னத்திரை படப்பிடிப்புக்கு தளர்வுகளை அளித்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி. சின்னைத்திரை படப்பிடிப்பை 20 பேர் வைத்து நடத்துவது கடினம். 40 பேரையாவது அனுமதிக்க வேண்டும்.
திரைப்பட துறை தொழில்துறையாக அறிவிக்கப்பட்ட பின், பிற தொழிலுக்கு கிடைக்க கூடிய எந்த பலனும் தயாரிப்பாளர் முதல் தொழிலாளிகள் வரை யாருக்கும் கிடைக்க வில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பயன்களையும் பெற முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு அறிவித்த ₹ 20 லட்சம் கோடி அறிவுப்புகளில் திரைத்துறைக்கு ஒரு பைசா கூட இல்லை.
ஆண்டுக்கு ₹ 15 ஆயிரம் கோடி வருவாயை தரக்கூடியது திரைத்துறை. வருவாயை அனுபவித்த மத்திய மாநில அரசுகள் இந்த இக்கட்டான நிலைமையிலாவது உதவ வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.