இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் ‘வீட்ல விசேஷம்’. இன்று வெளியாகியிருக்கும் இந்த சினிமாவில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்னா பாலமுரளி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆர்ஜே.பாலாஜியுடன் இணைந்து இயக்கியிருக்கிறார் என்.ஜே.சரவணன்.
50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணை அவரது குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பார்க்கக் கூடாது எனப் பேசுகிறது ‘வீட்ல விசேஷம்’. பள்ளி ஆசிரியராக இருக்கும் பாலாஜி தான் வேலை செய்யும் பள்ளியின் தாளாளர் மகளான அபர்ணா பால முரளியை காதலிக்கிறார். அப்பா சத்யராஜ் ரயில்வேயில் வேலை செய்கிறார். இப்படியாக கலகலப்பான கதாபாத்திரங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
50 வயதில் மூன்றாவது குழந்தைக்காக கருவுறும் ஊர்வசியை கடுமையாக வெறுக்கிறார்கள் பாலாஜியும், அவரது தம்பியும். பிறகு அவர்களும் சமூகமும் ஊர்வசியை ஏற்றுக் கொள்ளும் புள்ளியை நோக்கி நகர்கிறது திரைக்கதை. படத்தின் முதல் 20 நிமிடங்கள் ரொம்பவே மெதுவாக நகர்கின்றன. பெரிதாக பின்னனி இசை இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்கு பிறகு துவங்கும் கதை இறுதிவரை சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது.
கதையும் கதையில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களுக்கு ரொம்பவே செட்டில்டாக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கின்றனர். கதைக்கு வெளியே இருக்கும் சில காட்சிகளை தவித்திருக்கலாம். அழகான கதை நகைச்சுவை, காதல், செண்ட்டிமெண்ட் என அனைத்து சரிவிகிதத்தில் கலந்து அழகான பேமிலி ட்ராமாக கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். ஒளிப்பதிவும் கொஞ்சம் அழகாக இந்திருக்கலாம். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் விசேசமாக அமைந்திருக்கின்றன.
சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி என அனைவருமே நடிப்பில் நன்கு ஸ்கோர் செய்திருந்தாலும் சத்யராஜின் அம்மாவாக நடித்திருக்கும் KPAC லலிதாவுக்கு முதலிடம் கொடுக்கலாம். க்ளைமேக்ஸ் காட்சியில் ஏசு முருகன் குரல்கள் அவசியமற்ற சலசலப்பை ஏற்படுத்துகின்றன. தவிர்த்திருக்கலாம். ஒரு முழுமையான பீல் குட் படமாக இது கிடைக்கவில்லை என்றாலும், நிராகரிக்க இயலாத நல்ல சினிமாவாக அமைந்திருக்கிறது ‘வீட்ல விசேஷம்’. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.