மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

42-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ‘பிரமிட் நடராஜன்’ ஏற்று நடித்திருந்த ‘வரதராஜன்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
பிரமிட் நடராஜன்
பிரமிட் நடராஜன்pt web

(தொடரின் முந்தைய பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

பிரமிட் நடராஜன் அடிப்படையில் சினிமா தயாரிப்பு நிர்வாகி. ஜெமினி ஸ்டூடியோவில் தன்னுடைய பயணத்தைத் துவங்கி, பிறகு பாலசந்தருடன் இணைந்து ‘கவிதாலயா’ நிறுவனத்தின் நிர்வாகியாக பல வருடங்கள் இருந்துள்ளார். அதன் பிறகு தானே படங்களைத் தயாரிக்கத் துவங்கி ‘பிரமிட்’ என்கிற நிறுவனப் பெயரே முன்னொட்டாக அமைந்து அவரது அடையாளமாக ஆகிப் போனது.

தன்னைச் சுற்றியுள்ளவர்களின் திறமைகளைக் கவனித்து, அவற்றை தான் இயக்கும் படங்களில் சரியாக உபயோகிக்கத் தெரிந்தவர் பாலசந்தர். அவர்தான் பிரமிட் நடராஜனிடம் இருந்த ‘இயல்பான நடிகரை’ கண்டெடுத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

‘கவிதாலயா’ நிறுவனம் தயாரித்த ‘வேலைக்காரன்’ படத்தில் சிறிய வேடத்தில் வந்துபோனார் நடராஜன். அதுதான் முதல் படம். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் அவரது இயல்பான நடிப்பு அற்புதமாக அமைந்து கவனிக்கத்தக்கதாக மாறியது ‘அலைபாயுதே’ படத்தில்தான்.

பிரமிட் நடராஜன் - மிக இயல்பான நடிப்பு

இந்தத் திரைப்படத்தில் பிரமிட் நடராஜன் வருவது மிகச் சிறிய காட்சிகள்தான் என்றாலும் மிக அற்புதமானதொரு நடிப்பை இயல்புத்தன்மையுடன் தந்திருப்பார். இந்தப் படத்தில் நடராஜனின் பாத்திரப் பெயர் ‘வரதராஜன்’. வறுமையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து முன்னேறி நகரின் முன்னணி வழக்கறிஞர்களுள் ஒருவராக இருப்பார். எனவே அந்தப் பாத்திரத்திற்குரிய நாஸ்டலால்ஜியா அனத்தல்களும் தற்போது நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய உயர்வு மனப்பான்மையும் இந்த கேரக்டரில் கலவையாக அமைந்திருக்கும். இதை தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் நடராஜன்.

அறிமுகக் காட்சியிலேயே ஒரு கண்டிப்பான மிடில்கிளாஸ் தந்தையின் கறார்த்தனத்தையும் சிடுசிடுப்பையும் சரியான உடல்மொழியில் வெளிப்படுத்தியிருப்பார் வரதராஜன். தன்னுடைய இரண்டாவது மகன் யாரோ ஒரு பெண்ணுடன் சிகரெட் பிடித்ததை சாலையில் பார்த்துவிட்டு வீட்டில் அதை தன் மனைவியிடம் புகார் சொல்வதுதான் ஆரம்பக் காட்சி.

“ஷேவ் பண்ணுங்க தாத்தா. குத்துது” என்று சிணுங்கிக் கொண்டே சொல்லும் பேத்தி கன்னத்தில் முத்தமிட அதை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே இருக்கும் வரதராஜன், தன் மகன் கார்த்திக் வருவதைப் பார்த்ததும் சட்டென்று தொனியை மாற்றி “ஏண்டா.. உன்னை வளர்த்து ஆளாக்கினதுக்கு என்ன வேலை பண்றே?” என்று அதட்டலாக சொல்லி விட்டு, அந்தச் சமயத்தில் வருகிற தன் மனைவியிடம் “உன் பையன் இன்னைக்கு என்ன பண்ணான்னு தெரியுமா?” என்று புகார்ப் பட்டியலின் ஆரம்ப ராகத்தை இழுக்க ஆரம்பிக்கிறார். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டும்போது ‘உன் பையன்” என்று பிரித்துப் பேசுவது பெற்றோர்களின் இயல்பு.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 41 | ‘நான் வாழ வைப்பேன்’ ஸ்டைலிஷ் ரஜினிகாந்த்!

“அவன் உங்க பையனும்தான்” என்கிற மனைவி “சந்தேகமா?” என்று பின்குறிப்பாக கேட்பதில் உள்ள நையாண்டி பெண்களுக்கேயுரியது. ‘ச்சூ..’என்று அந்தக் கிண்டலை புறந்தள்ளும் வரதராஜன், “ஸ்பென்சர் சிக்னல்ல நின்னுட்டிருக்கேன். அண்ணன்… பைக்ல நாலு பேரு. ஆம்பள.. பொம்பளை தெரியல. காதுல கடுக்கன்.. குடுமி.. அடடா” என்று புகாரை இன்னமும் வலுவான பதிவாக இழுத்துச் செல்ல “ஏன் சுத்தி வளைக்கறீங்க. அம்மா.. நான் சிகரெட் பிடிக்கறத அப்பா பார்த்துட்டாரு” என்று அலட்சியமாகச் சொல்கிறான் கார்த்திக்.

“அந்தக் காலத்துல பார்த்தீங்கன்னா” - நாஸ்டால்ஜியா அனத்தல்

“வெறும் சிகரெட் இல்ல. எச்சி சிகரெட்டு.. ஸ்கூட்டர்ல பேண்ட்டு போட்டு ஒரு பொண்ணு.. அண்ணன் பின்னாடி.. அவ ஒரு இழு.. இவன் ஒரு இழு.. அடடாடா… கண்கொள்ளாக் காட்சி’ என்று நக்கலடிக்கிற வரதராஜன், ஈஸிசேரில் நன்றாக சாய்ந்தபடி ‘நம்ம குடும்பத்துல இப்படி ஒரு எச்சைப்பய’ என்று சொல்வதில் கிண்டல் மட்டுமல்லாது அப்பட்டமான வெறுப்பும் தெரியும்.

‘நீ சிகரெட்டு பிடி.. எப்படின்னா ஒழிஞ்சு போ.. ஆனா என் சம்பாத்தியத்துல பிடிக்காத.. நீ சம்பாதிச்சி பிடி.. இந்தக் கைல ஒண்ணு வெச்சுக்க.. அந்தக் கைல ஒண்ணு வெச்சுக்க.. ஏன் காதுல கூட ஒண்ணு செருகிக்க” என்று நக்கலடிக்கும் தகப்பனிடம் ‘சிகரெட்டு பிடிக்கறது அவ்வளவு பெரிய பாவமா?” என்று மல்லுக் கட்டுவான் கார்த்திக்.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

“என்னைப் பத்தி இந்த வீட்ல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. சம்பாத்திச்சுக் கொட்ற மிசின்னுன்னா.. அவன் வயசுல நான் காலுக்கு செருப்பு கூட இல்லாம அலைஞ்சேன் தெரியுமா.. நாலணா கொடுப்பாரு எங்க அப்பா.. நேரா பீம விலாஸ் போவேன்.. ஒரு தோசை.. ஒரு காஃபி.. நடையைக் கட்டுவேன் ஜோசப் காலேஜிக்கு” என்று வரதராஜன் சலித்துக் கொள்வார்.

அந்தக் காலத்துல பார்த்தீங்கன்னா’ என்பதும் ‘நான் இல்லைன்னா இந்த வீடு என்ன ஆகும் தெரியுமா’ என்று சவடால் விடுவதும் வயதான குடும்பத்தலைவர்களின் வழக்கமான அங்கலாய்ப்பு.

அப்பா பழைய கதையை மீண்டும் எடுத்து விடுவதை, ‘தொன்னூத்து எட்டாவது தடவையா சொல்றாரு” என்று மூத்த மகன் தன் மனைவியிடம் ரகசியமாக கிண்டலடிக்க “தாத்தா.. உங்களைப் பத்திதான் பேசறாங்க’ என்று பேத்தி போட்டுக் கொடுக்க முயல்வாள். ஒரு காட்சிக்குள் எத்தனை நுண்மையான தகவல்களும் வசனங்களும் உடல்மொழியும் வெளிப்படுகிறது என்பதற்கான சிறந்த காட்சி இது.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

ஒரு காட்சியை எப்படி சுவாரசியமாக டிசைன் செய்வது?

“அப்பா.. உங்க பிரச்னை என்ன.. அந்தக் காலத்துல செருப்பு இல்லாம நடந்தீங்க. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தீங்க.. ஒத்துக்கறோம். விழுந்து கும்பிடறோம்.. அதுக்காக நாங்களும் இப்ப செருப்பு இல்லாம நடக்கணுமா?’ என்று கார்த்திக் கிண்டலடித்துக் கொண்டே வர “அப்பாவை எதிர்த்து பேசாத’ என்று மூத்த மகன் ரகசியமாக அறிவுறுத்துவான். ஆனால் அதை சட்டையே செய்யாத கார்த்திக், செலவிற்காக அம்மாவின் முந்தானையைப் பிடித்து இழுக்க “உங்க பர்ஸை கொடுங்க” என்று அம்மா கேட்க “நல்லாப் பேசுங்க.. ஆனா இதுக்கு மட்டும் இங்க வந்துடுங்க” என்று வரதராஜன் சரியான சமயத்தில் தன்னுடைய கார்டை இறக்க, கார்த்திக் கோபித்துக் கொண்டு திரும்புவதுபோல் பாவனை செய்வான்.

“பிடிவாதத்தைப் பாரு.. முளைச்சு மூணு இலை விடல” என்று வரதராஜன் சற்று இறங்கி வருவார். என்ன இருந்தாலும் மகன் அல்லவா?. “முளைச்சு முப்பது இலை விட்டப்புறமும் நீங்க காட்டாத பிடிவாதமா.. உங்க அக்காவை ஒரு வார்த்தை ஏதோ சொல்லிட்டேன்னு சொல்லி அஞ்சு வருஷம் பேசாம இருந்தீங்களே.. அந்தக் குணம் எங்கே போகும்?” என்று மகனுக்கு மறைமுகமாகப் பரிந்து பேசி கணவனை இடித்துரைப்பார் மனைவி. பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் கார்த்திக்கிடம் “எங்க போறே?” என்று அண்ணி கேட்க “எங்க அப்பா சொத்தை சிகரெட்டா ஊதித் தள்ள” என்று குறும்பாக சொல்லி விட்டுச் சொல்வான். “தாத்தா.. உங்க சொத்துல்லாம் போச்சு” என்று பேத்தி பாவனையாக அலறுவதோடு இந்தக் காட்சி ரகளையாக முடியும்.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 38 | தடுமாற்றத்தால் சறுக்கிவிழும் இளைஞனாக ‘திலீப்’

மிடில் கிளாஸ் குடும்பங்களின் அகங்கார உரசல்

தான் துரத்தி துரத்திக் காதலிக்கும் பெண்ணுடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் மளிகைக் கடைக்கு, தன் அண்ணனின் பெண்ணை வைத்து போன் செய்ய வைப்பான் கார்த்திக். ‘பிரெண்டு தங்கச்சி’ என்கிற பொய்க் காரணம் வேறு. சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக இதைச் செய்து முடிக்கும் சிறுமி, ரெண்டு ரூபாய் லஞ்சமாக வாங்கிக் கொண்டு, எதிரே வரும் தாத்தாவிடம் “தாத்தா.. தாத்தா.. நான் ரெண்டு ரூபா சம்பாதிச்சிட்டேன்” என்று உற்சாகமாக குதித்துக் கொண்டே சொல்ல “எப்புட்றா கண்ணு?” என்று வரதராஜன் கேட்க “சித்தப்பா. ஒரு பொண்ணுக்கு போன் பண்ணி கொடுக்கச் சொன்னாரு” என்று குதித்துக் கொண்டே போன் நம்பரை ரைம்ஸ் போல சொல்ல அந்தச் சமயத்தில் கண்ணை மூடி தலையை அசைத்து பிரமிட் நடராஜன் தரும் ரியாக்சன் சுவாரசியமானது.

அடுத்து வரப் போவது, அலைபாயுதே படத்தின் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்று. அற்புதமாக வடிவமைக்கப்பட்டு படமாக்கப்பட்டதும் கூட. உயர் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் இடையிலான அகங்கார உரசல் வசனங்களிலும் உடல்மொழியிலும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

தன்னுடைய மகன் கார்த்திக் யாரையோ ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிய வந்ததும் மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் சக்தியின் வீட்டிற்கு பெண் கேட்கச் செல்வார் வரதராஜன். இந்தக் காட்சியின் மூலம் அவர் நல்லவரா, கெட்டவரா என்றே கண்டுபிடிக்க முடியாது. அவர் இயல்பாக சொல்லிச் சொல்லும் விஷயங்கள் ஒருவகையில் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அதைச் சொல்லும் முறையில் குத்தலும் நையாண்டியும் இருப்பதால் பெண் வீட்டார் அதை அவமானமாக எடுத்துக் கொள்வதோடு காட்சி முடியும்.

சக்தியின் வீட்டை ஒரு மாதிரியாக கண்டுபிடிக்கும் வரதராஜன், “இந்த வீடுதானே.. இந்த நம்பர்தானே சொன்னாங்க..” என்று தன்னுடைய கார் டிரைவரிடம் விசாரித்து விட்டு “சரி. வண்டிய நிழல்ல போடு” என்று பின்குறிப்பாக சொல்வது காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

“எந்தக் கழுதையா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும்”

வீட்டிற்கு உள்ளே செல்லும் வரதராஜன் மிக இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “வீடு மாறி வந்துட்டமோன்னு ஒரு கவலை. க்வார்ட்டஸ்ஸூ.. வீடு எல்லாம் ஒரே மாதிரி இருக்குங்களா.. ஒரு சின்ன கன்ப்யூசன்..” என்று இயல்பாக ஆரம்பித்தாலும் அதில் ஹவுஸிங் போர்டு வீடுகளின் குறுகிய அளவை கிண்டலடிப்பது போன்ற தொனி வந்து விடுவதால் “மிடில் கிளாஸ் வீடுங்க அப்படித்தான் இருக்கும்” என்று சக்தியின் தந்தையான செல்வராஜ் அந்தத் தொனியை எரிச்சலுடன் கையாள்வார். ஆரம்பமே அபஸ்வரமாகப் போய் விடும் வசனம் இது.

தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களை பெண்களின் தகப்பனார் அறிமுகப்படுத்தும்போது ‘தெரியும்.. வீட்டுக்கு வந்திருக்காங்க” என்று கார்த்திக்கின் அம்மா சொல்ல ‘அப்படியா?’ என்று ஆச்சரியத்தை மறைத்துக் கொள்வார் சக்தியின் அப்பா. “நமக்கு இதெல்லாம் தெரியாதுங்க.. இதையெல்லாம் நாம கவனிக்கறதில்லங்க.. ஒரு மாதிரி ரகசிய ஏற்பாடா நடக்குது” என்று வரதராஜன் சொல்லும்போது இந்தச் சம்பந்தத்தை அவர் ஒரு வித மனவிலகலுடனும் ஒரு கட்டாயத்தின் பேரிலும் செய்கிறார் என்பது புரிந்து விடும்.

“கொஞ்சம் காஃபி கெடைக்குங்களா?” என்று உரிமையாக கேட்கும் வரதராஜன் “இந்த ரெண்டு பொண்ணுங்கள்ல யாரு?” என்று கேட்க அந்தக் கேள்வியை மிக சாமர்த்தியமாக சமாளிப்பார் கார்த்திக்கின் அம்மா. தன் மகன் காதலிப்பது இளைய மகள் என்பதை அறிந்து கொள்ளும் வரதராஜன் “பெரியவளுக்கு இன்னமும் கல்யாணம் நிச்சயம் பண்லீங்களா,?” என்று சம்பிதாயமாக விசாரித்து விட்டு “என்னம்மா.. நீ அரேஞ்சுடு மேரேஜா.. இல்ல. சிஸ்டர் மாதிரி லவ்வு கிவ்வுன்னு… அப்பாக்கு செலவு வெக்காம’.. என்று நக்கலடிப்பதில் வரதராஜனின் மெல்லிய வன்மம் அந்த அறையெங்கும் வழிந்தோடுகிறது.

அந்தக் குரூரமான நையாண்டியைப் புரிந்து கொள்ளும் வரதராஜனின் மனைவியே ‘என்னங்க நீங்க.. ?’ என்று மெலிதாக கையை இடித்து அதைக் கண்டிக்கிறார். “கேள்வி கேக்கறது நம்ம ஃபுரொபஷனங்க” என்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் வரதராஜன். “கிரிமினல் லாயர் இவரு” என்று மனைவி இப்போது பெருமிதத்துடன் முட்டுக் கொடுக்க “அப்ப நெறைய பொய் சொல்லி சம்பாதிக்க வேண்டியிருக்கும் போல” என்று அடுத்த பவுன்சரை போடுகிறார் சக்தியின் தந்தை. ‘ஹா..ஹா..ஹா’ என்று அசட்டுச் சிரிப்புடன் அதைச் சமாளிக்கும் காட்சியில் பிரமிட் நடராஜனின் நடிப்பு அத்தனை தத்ரூபமாக இருக்கிறது.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 34 | உணர்ச்சிகரமான உயிர் நண்பன் ‘ரகு’வாக ‘சலங்கை ஒலி’ சரத்பாபு!

“எப்ப சார் வருது.. இந்தக் கர்வம்?”

உரையாடல் இப்படி பரஸ்பர அகங்கார உரசலாகச் சென்று கொண்டிருக்கும்போது வரதராஜனின் ஒரு கமெண்ட் உரையாடலை மிகவும் மோசமாக்குகிறது. “20 வயசு ஆயிட்டாலே அவன் விரும்பற பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்றதுதான் சட்டம். எங்க கார்த்திக் ரோட்ல போற எந்தப் பொண்ணை இழுத்துட்டு வந்தாலும் அந்தக் கழுதையை நாங்க ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்” என்கிறார். ஒரு வழக்கறிஞராகவும் சட்டரீதியாகவும் அவர் சொல்வது சரியான பாயிண்ட். ஆனால் அதைச் சொன்ன விதம்தான் எதிர் தரப்பை மோசமாக அவமதிப்பது போலவே அமைந்து விடுகிறது. அதனால்தான் பிரமிட் நடராஜனின் நடிப்பு ‘நல்லவரா, கெட்டவரா’ என்று குழம்பும் வகையில் இயல்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.

“எப்ப சார் வருது இந்தக் கர்வம். கொஞ்சம் படிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனேயா?” என்று அடிபட்ட குரலில் கேட்கிறார் சக்தியின் தந்தை. அவருடைய சுயமரியாதை இந்தக் கேள்வியை கேட்க வைப்பது முற்றிலும் நியாயமான விஷயம். “நம்ம வீட்டுக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு நம்ம பொண்ணையும் ரோட்ல போற பொண்ணையும் ஒண்ணா வெச்சு பேசறாரு” என்று ஒரு தந்தையாக அவர் மனக்கொதிப்புடன் பேசுவது சரியான எதிர்வினை.

இந்தச் சமயத்தில் வரதராஜன் ஒரு டிபன்ஸிவ் பொஷிஷனை எடுக்கிறார். “நம்ம இம்ப்ரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.. சுப்ரியாட்டி காம்ப்ளக்ஸ் இதைப் பத்தியெல்லாம் ஓரமா வெச்சுட்டு கல்யாணத்தைப் பத்தி பேசுவோம்” என்று சொன்னாலும் மீண்டும் அவரின் குரூரமான பேச்சு வெளிப்படுகிறது. “என் பையன் கம்ப்யூட்டர் இன்ஜினியர்…. பொிசா வருவான்னு எதிர்பார்த்தேன். இப்படி காதல், கீதல்ன்னு சிக்கிப்பான்னு எதிர்பார்க்கலை” என்று சொல்ல இப்போது சக்திக்கு கோபம் வந்து “சார்.. யாரும் உங்க பையனை வலை வீசி பிடிக்கலை” என்பதை பணிவு கலந்த ஆட்சேபத்துடன் தெரிவிக்கிறாள்.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 32 | விரோதம் கூடாது.. சமாதனக் கொடியோடு ஒரு அமைதிப்புறா ‘தம்பி’!

ஒரு திருமண வரன் பேச்சு வரதராஜனின் உயர்வு மனப்பான்மை காரணமாகவும் அகங்காரமான கிண்டல் காரணமாகவும் உடைந்து போகிறது. ஒருவேளை அதுதான் அவரது நோக்கமோ என்னமோ?! என்னதான் இருந்தாலும் லீடிங் கிரிமினல் லாயர் ஆயிற்றே..!

அடிமட்டத்திலிருந்து கிளம்பி முன்னேறியிருந்தாலும் இப்போதிருக்கும் சமூக அந்தஸ்து காரணமாக இன்னொரு சமூகத்தை இளக்காரமாக பார்க்கும் ஒரு தந்தையின் சித்திரத்தை மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருந்தார் பிரமிட் நடராஜன். அலைபாயுதே திரைப்படத்துடன் பல்வேறு இனிய நினைவுகளை மீட்டெடுக்கும்போது அதில் ‘வரதராஜன்’ என்கிற இந்த தந்தையின் பாத்திரமும் நிச்சயம் கலந்திருக்கும். தனது நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாதபடி செய்து விட்டார் நடராஜன்.

பிரமிட் நடராஜன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 29 | “அப்ப என் காதல் ஃபெயிலியரா?” - அவ்வை சண்முகி மணிவண்ணன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com