வழக்கமாக படம் ஆரம்பிப்பதற்குமுன் ‘புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்-உயிரைக்கொல்லும்’ என்று எச்சரிக்கை கொடுப்பதுபோல, ‘சப்-டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்க்காதீர்’ என்று இப்படத்திற்கு எச்சரிக்கை செய்யவேண்டியதை மறந்துவிட்டார் படத்தின் இயக்குனர் ராஜீவ் மேனன். ஏனென்றால், இது, தமிழ் மொழியில் மட்டுமே வெளியான கோலிவுட் படம் அல்ல. இது, ஹாகோலிவுட் படம். இன்னும் சொல்லப்போனால் சப்-டைட்டிலுடன் பார்த்தால்கூட ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு ஸ்டாப்- ரீவைண்ட் பட்டன்களை அடிக்கடி பயன்படுத்தித்தான் டயலாக்குகளை புரிந்துகொள்ளமுடியும். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசப்படும் என்பதால்தான் ஹாலிவுட்+ கோலிவுட் = ஹாகோலிவுட் படம்.
லாக்-டவுன் சூழலில் பைக் பிரேக்-டவுன் ஆனதால் ஊருக்குச்செல்ல உதவிகேட்டு, பள்ளிகால நண்பனின் (தற்போது டாக்டர்) வீட்டுக்கு வருகிறார் ஆண்ட்ரியா. சிகிச்சையளித்த நோயாளிக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால், டாக்டர் நண்பனால் பேருந்துநிலையத்துக்கு அழைத்துசெல்லமுடியாத சூழல். வாகனங்கள் கிடைக்காமல், நண்பனின் அம்மாவுடன் தங்குகிறார் ஆண்ட்ரியா. அதற்குப்பிறகு, என்ன நடக்கிறது? என்பதுதான் மீதி.
குருசரண் நிஜ டாக்டராகவே கண் முன் நிற்கிறார். திடீரென்று, தான் சிகிச்சை அளித்த நோயாளிக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அதிர்ச்சியுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாகட்டும், கதவைப்பூட்டிக்கொள்ளும் ஆண்ட்ரியாவை வெளியில் வரவழைக்க பாடலின் ராகத்தை தவறாக பாடுவதாகட்டும் ஸ்வீட் கேப்ஸ்யுலாக இனிக்க வைக்கிறார்.
அம்மா லீலா சாம்சன் இயல்பான நடிப்பில் ‘சில்லு கருப்பட்டி’யை சிதறவிடுகிறார். ஆண்ட்ரியாவை நடிப்பில் கவர்வதற்கு பதில் பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் காஸ்டியும்கள் மனதை கொள்ளைக்கொள்ளும் ஹேர்ஸ்டைல் மூலம் கவரவைக்க முயற்சித்து அதில், வெற்றியும் பெற்றிருக்கிறார் ராஜீவ் மேனன். மற்றப் படங்களை விட ஆண்ட்ரியா அழகில் ஆசம் சொல்ல வைக்கிறார். க்யூட் ஆண்ட்ரியா.
ஆனால், கொக்கைன் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையான ஆண்ட்ரியாவுக்கு முதுநிலை முடித்த டாக்டர், உடல்ரீதியாக ஏதாவது சிகிச்சை அளிப்பார் என்று எதிர்பார்த்தால் சைக்காலஜி படித்த உளவியல் நிபுணர்போல உள்ளத்துக்கான சிகிச்சையை மட்டுமே அளிக்கிறார்.
டாக்டர் நண்பன் வேண்டுமென்றால் ட்ரக் அடிக்ட் ஆண்ட்ரியாவை கேஷுவலாக அணுகலாம். ஆனால், ஹைடெக் அம்மாவாக இருந்தாலும் ‘கொக்கைன்’ போதைப்பொருளுக்கு அடிமையான ஆண்ட்ரியா மீது கொஞ்சம்கூட வருத்தப்படாமல் அதிர்ச்சிகூட அடையாமல் சாப்பாடெல்லாம் ஊட்டி கவனித்துக் கொள்வதை இதயம் ஏற்க மறுக்கிறது. இதையே, ஏற்றுக்கொள்ளாத மனம் க்ளைமாக்ஸில் ஆண்ட்ரியாவிடம் குருசரண் எப்போதே எழுதிவைத்த கவிதையைப் படித்து காதலைச் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள்ளுமா என்ன?
- வினி சர்பனா