சுதா கொங்கரா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுகாசினி மணிரத்னம் ஆகிய 5 இயக்குநர்கள் இயக்கிய 5 குறும்படங்களின் தொகுப்பே ’புத்தம் புது காலை’. கடந்த 15 ஆம் தேதி வெளியான இப்படத்தின் அனைத்து கதைகளின் மையக்கரு கொரோனா ஊரடங்குதான். இதில், முதல் படமாக வெளியாகி இருக்கும் ‘இளமை இதோ இதோ’ குறும்படத்தின் விமர்சனம் இதோ.
“ஏன் அழுவுற? என்னோட டீ பிடிக்கலையா? இல்ல என்னை பிடிக்கலையா?”
“இதுவரைக்கும் யாரும் என்கிட்ட டீ குடிக்கிறியான்னுக்கூட கேட்டதில்ல. அப்புறம் எப்படி உன்னை பிடிக்காம போகும்?
உன் பொண்ணுக்கிட்ட என்ன சொல்லப்போற?”
“ஏழு வருஷத்துக்கு முன்னால அந்த சுப்பு பையன் கையை இழுத்துக்கிட்டு வந்தபோது, இவரைத்தான் காதலிக்கிறேன்னு சொன்னப்போ நான் ஒத்துக்கிட்டேன்ல? ஏன்னா, எங்களுக்கு லவ் வராதா? ஆமா, உன் பையன்கிட்ட என்ன சொல்லப்போற?”
தனுஷ் நடித்த ‘பவர் பாண்டி’ யில் ராஜ்கிரணும் ரேவதியும் சொல்லமுடியாமல் பிரிந்துபோன காதலை ஜெயராம் ஊர்வசி மூலம் ‘இளமை இதோ இதோ’ அணைத்து ம்ஹூம் அரவணைத்து சேர்த்து வைத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ஆரம்பப்பள்ளிக் காதல், உயர்நிலைப்பள்ளிக்காதல், மேல்நிலைப்பள்ளிக்காதல், கல்லூரி இளநிலைக் காதல், கல்லூரி முதுநிலைக்காதல், அலுவலகக் காதல் என திருமணத்துக்கு முந்தைய பலகாலக் காதல்களை எல்லாம் ‘அழகி’யலாக ‘ஆட்டோகிராஃப்’ஆக ரசிக்கும் சமூகம் திருமணத்துக்குப்பின் வாழ்க்கைத்துணையை இழந்த முதுமைக் காதலை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் உணர்வுகளை இளமைக்காதலர்களுக்கு பஞ்சுக் கைகளால் ‘பஞ்ச்’ பண்ணுவதுபோல் மென்மையாகச் சொல்லியிருக்கிறார் ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா.
‘காத்திருந்த காதலன் நான்’ என காதலியின் வருகைக்காக குஷியில் குத்தாட்டம் போடும் ஜெயராம்… இன்னும் 21 நாள் இருக்கேன்ல. எல்லாத்தையும் சொல்லித்தர்றேன் என்கிற ஊர்வசியின் இளமைக் காதாப்பாத்திரம் வீக்கான இதயங்களைக்கூட ‘வீக்கெண்ட்’ கொண்டாடத் தூண்டுகிறது.
ஐ.சி.யூவில் இருப்பவர்களைக்கூட ‘ஐ சீ யூ’ என்று பழையக் காதலைத்தேடிச்சென்று உயிர்ப்பிக்க வைத்து ’இளமை இதோ இதோ’ என்று எத்தனை வயதானாலும் காதலுக்கு வயதே ஆவதில்லை என்பதை உணர்த்தி முதுமைக் காதலை சேர்த்து வைத்திருக்கும் சுதா கொங்கராவுக்கு கங்கிராட்ஸ்!
- வினி சர்பனா