புத்தம் புது காலை விமர்சனம்: சுகாசினி மணிரத்னத்தின் ’காஃபி எனி ஒன்?’ எப்படி இருக்கிறது?

புத்தம் புது காலை விமர்சனம்: சுகாசினி மணிரத்னத்தின் ’காஃபி எனி ஒன்?’ எப்படி இருக்கிறது?
புத்தம் புது காலை விமர்சனம்: சுகாசினி மணிரத்னத்தின் ’காஃபி எனி ஒன்?’ எப்படி இருக்கிறது?
Published on

கோமாவால் மருத்துவமனையில் இருக்கும் வயதான மனைவி, சிகிச்சைகளால் படும் மரண வேதனையைப் பார்த்து பொறுக்கமுடியாமல் வீட்டிலேயே வைத்து அரவணைப்பு  சிகிச்சையளிக்கும் வயதான கணவர் என்பதுதான்  ‘காஃபி எனி ஒன்?’ னின் ஒன்லைன்.

ஐ.சி.யூவில் இருக்கிறார் அம்மா என்றத் தகவலால்  பதறியடித்துக்கொண்டு வெளிநாட்டிலிருந்து பறந்துவரும் மகள்கள் சுஹாசினி, அனுஹாசன். அம்மாவை  இப்போதே மருத்துவமனையில் பார்க்கலாமா? என்று கேட்கும்போது காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு  கேஷுவலாக வரும் தந்தை காத்தாடி ராமமூர்த்தி நடிப்பிலும் செம்ம கேஷுவல்.

அதுவும், இயரிங் எய்டுதான் காதில் மாட்டியிருக்கிறாரோ என்று நினைக்கவைத்துவிட்டு, மகள்கள் பேசும்போது அவர்  கையால் எடுத்துவிட்டு பேசும்போதுதான் அது ஹெட்ஃபோன் என்று காண்பித்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடித்த சுகாசினியும் அனுஹாசனும் நடிப்பில் நாடகமாடுவதுபோல் இருந்தாலும் நாடக நடிகரான காத்தாடி ராமமூர்த்தி எதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களையும் ஆற்றுப்படுத்துகிறார்.  அனுஹாசன் கர்ப்பமானதும்  ‘ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’ என்று மகிழ்ச்சியடைகிறார். நீண்ட வருட சிகிச்சைகளுக்குப்பிறகு கருத்தரிக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதான் அதற்கு ஏன் ஸ்பானிஷ் மொழியில் அனுஹாசனும் சுகாசினியும் பாட்டுப்பாடி ஆடுகிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.    

மூளை தண்டுவடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால்  ‘லாக் இன் சிண்ட்ரோம்’ என்ற  பிரச்சனை  ஏற்பட்டு கோமாவில் இருப்பவருக்கு அதற்கேற்ற சிகிச்சையும் தேவை. கூடுதலாக அன்பும் ஆதரவும்  தேவை. ஆனால், பழைய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்ததும் குணமாகிவிடுவார்களே அதுபோல, கோபித்துக்கொண்டு மும்பையில் இருக்கும் மூன்றாவது மகள் ஸ்ருதிஹாசன்  வீடியோ காலில் பேசியதும் குணமாகி எழுந்து உட்கார்ந்து பேசுகிறார் என்பது மிராக்கிள்.  இன்சிடெண்ட் காஃபி போல் வந்துபோகிறார் ஸ்ருதி.

காஃபி விளம்பரம்போல் சில காட்சிகள் இருந்தாலும் முதிய வயதில் தன் மனைவிமீது வைத்திருக்கும் காதலையும் அன்பையும் அருகிலிருந்து பொழிந்து, இனிப்பான காஃபிபோல் ரசிகர்களை ருசிக்கவைக்கிறது காத்தாடி ராமமூர்த்தியின் கதாப்பாத்திரம். மூன்று பெண்களையும் சுதந்திரமாக வளர்த்ததாக சொல்லும் பெண்ணிய கருத்துக்களாலும் முற்போக்கான எதார்த்தமான வசனங்களாலும் மட்டும் சுகாசினி மணிரத்னத்தின் ’காஃபி எனி ஒன்’னை தாராளமாகப் பருகலாம்!

 - வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com