இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் 5 படங்கள், பாலிவுட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனைப் புரிந்துள்ளன. இந்தச் சாதனை தென்னிந்திய திரையுலகத்திற்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளன. இதனாலேயே, தற்போது தென்னிந்திய திரையுலகம், பான் இந்தியா படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுபற்றிய சிறு தொகுப்பை நாம் இங்கு காணலாம்.
சமீபகாலங்களில், பாலிவுட் திரையுலகம், தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதிலும், அந்தப் படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு முன்னோடியாக அமைந்தது என்றால், அது எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில், வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டு, கடந்த 201-ம் ஆண்டு பிரம்மாண்டமாக உருவாகியிருந்த ‘பாகுபலி’ படம் தான். அதிலும், ‘பாகுபலி : தி பிகினிங்’கை காட்டிலும், ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது.
இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ரோகிணி உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடித்திருந்தது. இதில், ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரம் புகழ்பெற்றதாக அமைந்தது. இதையடுத்து, ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த ‘2.0’, பிரபாஸின் ‘சாஹோ’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் வெளிவந்த ‘கே.ஜி.எஃப்.’ பெரும் வரவேற்பை பெற்றது. கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படமும், கன்னட திரையுலகின் மீது புதிய வெளிச்சத்தை கொண்டு வந்ததே என்று சொல்லலாம்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி ரைஸ் - பார்ட் 1’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. முதலில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படம், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் அதிவேக வளர்ச்சியைக் கண்டது. முக்கியமாக இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலுக்கு உதவிப் புரிந்தன.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக, பொங்கலை முன்னிட்டு வரவிருந்த பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டன. இதனாலும், ரீப்பிட் ஆடியன்ஸால் ‘புஷ்பா’ படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தற்போதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட தென்னிந்தியப் படங்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ள படங்களில் 5-வது படமாக ‘புஷ்பா’ படம் இணைந்துள்ளது.
மேலும், ‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரமாண்ட படங்கள், அடுத்த மாதம்தான் வெளியாகிறது. இதனால், அதுவரை ‘புஷ்பா’ திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ‘பாகுபலி : தி பிகினிங்’கை காட்டிலும், ‘புஷ்பா’ திரைப்படம் அதிக வசூலை ஈட்டும் எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட தென்னிந்திய படங்களில், அதிக வசூல் செய்த 10 படங்களை பற்றி இங்குக் காணலாம்.
10 தென்னிந்தியப் படங்கள்:
1. பாகுபலி 2 : தி கன்குளூஷன் - ரூ. 510.99 கோடி (2017)
2. ரோபோ 2.0 - ரூ. 189.55 கோடி (2018)
3. சாஹோ - ரூ. 142.95 கோடி (2019)
4. பாகுபலி : தி பிகினிங் - ரூ. 118.7 கோடி (2015)
5. புஷ்பா: தி ரைஸ் பார்ர்ட் 1 - ரூ. 100.38 கோடி (2021)
6. கே.ஜி.எஃப் : சாப்டர் 1 - ரூ. 44.09 கோடி (2018)
7. கபாலி - ரூ. 28 கோடி (2016)
8. எந்திரன் - ரூ. 23.84 கோடி (2010)
9. காலா - ரூ. 10.38 கோடி (2018)
10. சைரா நரசிம்ம ரெட்டி - ரூ. 7.93 கோடி (2019)
தற்போது இந்தி மொழிமாற்றம் மட்டுமின்றி மாநகரம், மாஸ்டர், டிரைவிங் லைசென்ஸ், ஹிட், விக்ரம் வேதா, யூ-டர்ன், ஹெலன், அலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.
உறுதுணை : பாலிவுட் ஹங்மா