திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்.. 'புலிக்குத்தி பாண்டி' அல்ல 'புலிக்குத்தி பேச்சி'- பட விமர்சனம்

திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்.. 'புலிக்குத்தி பாண்டி' அல்ல 'புலிக்குத்தி பேச்சி'- பட விமர்சனம்
திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்.. 'புலிக்குத்தி பாண்டி' அல்ல 'புலிக்குத்தி பேச்சி'- பட விமர்சனம்
Published on

எப்பொழுதும் சண்டை போடுவதும் பின்னர் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலைவதுமாக இருக்கும் ஹீரோ. ஆனால், அவர் மிகவும் நல்லவர், கொடைவள்ளல் தன்மை கொண்டவர், நூறு பேரை வீழ்த்தும் சூரர், பாசம் காட்டுவதில் திக்குமுக்காட வைப்பவர்... இவையெல்லாம்தான் இயக்குநர் முத்தையா படத்தின் ஹீரோ வடிவமைப்பாக இருக்கும்.

சண்டை போட்டுவிட்டு கோர்ட், போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஹீரோவை திருத்தி, குடும்ப வாழ்க்கையை வாழவைக்கும் மனைவியாக ஹீரோயின். இதுதான் இயக்குநர் முத்தையா எடுக்கும் படங்களின் டெம்பிளேட். 'புலிக்குத்தி பாண்டி'யும் மாற்றமேயில்லாமல் அப்படியேயான கதைதான். பொங்கல் பண்டிகையையொட்டி 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்', 'பூமி' வரிசையில் பொங்கல் வெளியீடாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகியது 'புலிக்குத்தி பாண்டி'.

விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், லட்சுமி மேனன் கதாநாயகியாகவும் நடிக்க வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ், சமுத்திரக்கனி, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'கொம்பன்', 'குட்டிப்புலி', 'மருது' படங்களில் சசிக்குமார், கார்த்தி, விஷால் கதாபாத்திரங்களைப் போலதான் 'புலிக்குத்தி பாண்டி'யில் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரமும். அதேபோல், அந்த ஹீரோவின் நல்ல குணங்களை பார்த்து மெய்சிலிர்த்து 'திருமணம் செய்தால் இவனைத்தான் செய்து கொள்வேன்' என ஒற்றைக்காலில் நிற்கும் ஹீரோயினாக லட்சுமி மேனன். வழக்கமாக அவர் படங்களில் இருக்கும் வில்லன் கதாபாத்திரங்களாக வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ்.

'கொம்பன்' படத்தில் வரும் பல காட்சிகள் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது. அப்புறம், 'குட்டிப்புலி' படத்திலும் வரும் காட்சிகளையும் பல இடங்கள் நினைவுபடுத்திவிட்டு செல்கிறது. 'மருது' படத்தையும் கூட சில இடங்களில் நினைவூட்டுகிறது. ஹீரோயின் சொன்னவுடன் அப்படியே ஹீரோ விக்ரம் பிரபு முழுசா திருந்தி அநியாயத்திற்கு நல்ல குடும்பஸ்தனாக மாறிவிடுகிறார் 'கொம்பன்' படத்தைப் போல. ஒரு வில்லனை கொடூரமாக வடிவமைக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தில் துவக்கமே கொடூர வில்லன்களாக வரும் வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் கேரக்டர்களின் ப்ளாஷ் பேக்தான். அவ்வளவு வன்முறையாக அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வன்முறையில் இருந்து பாசத்தை நோக்கி படம் நகரும்போது நன்றாகவே இருக்கிறது. உண்மையில் இயக்குநர் முத்தையாவுக்கு நன்றாகவே உணர்வுபூர்வ படம் எடுக்க தெரிகிறது. அதில் சந்தேகமே இல்லை. அவர் உணர்வுபூர்வமாக காட்சிகளை அசால்டாக எடுத்துவிடுகிறார். பின்னணி இசை, திரைக்கதை அமைக்கும் விதம் பல விஷயங்கள் அவர் படங்களில் நேர்த்தியாக இருக்கும். கேமராவையும் கிராமப் பின்னணியில் யதார்த்தமாக பயன்படுத்திருக்கிறார். வட்டிக் கொடுமைப் பற்றியும், விவசாயிகள் படும் கஷ்டம் பற்றியும் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவை உண்மையில் உணர்வுபூர்வமானவை. பாடல்களும் அவை காட்சி அமைக்கும் விதமும் நன்றாகவே இருக்கிறது. விக்ரம் பிரபு திருமணத்திற்கு பிறகு நடந்துகொள்ளும் விதமும், அது படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கிறது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனம் உள்ளிட்ட எல்லோருமே தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

ஆனால், ஒட்டுமொத்தமாக வன்முறைதான் நம்முடைய மனதில் நிலைத்து நிற்கிறது. இதில் கதாநாயகியை அருவா, கத்தி பிடிக்க வைத்து ருத்ர தாண்டவம் ஆடவைப்பதெல்லாம் 'வேற லெவல்'. ஆனால், தமிழக கிராமங்கள் இப்படிதான் வன்முறைக் களமாக இருக்கிறேதோ என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. கடைசியில் இது உண்மை சம்பவம் என்றும் டைட்டில் வருகிறது. உண்மைச் சம்பவமாகவே இருந்தாலும் படம் முழுக்க ஏன் இந்த அளவுக்கு வன்முறை கையாளப்படுகிறது என்பது தொக்கி நிற்கும் முழுமுதற் கேள்வி.

பகையும் பயமும் தெறிக்கும் விதமாக திரைக்கதையில், வன்முறையை இந்த அளவிற்கு கட்டவிழ்க்கப்படுவது ஒருவித திணிப்பு நடவடிக்கையாக உணர முடிகிறது. சின்னத்திரையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தில் வன்முறை உச்சகட்டத்தில் இருப்பது, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு குறித்த கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகி லட்சுமி மேனனை வன்முறையில் இறக்கவிட்டிருக்கும் விதம் ரசிகர்களைத் திக்குமுக்காட செய்திருக்கிறது. க்ளைமேக்ஸில் ரசிகர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டு, லட்சுமி மேனனை ருத்ர தாண்டவம் ஆட வைத்திருக்கிறார். பெண் கதாபாத்திரத்தின் கைகளில் அருவா கைமாறுவதை இப்படம் வலுப்படுத்தியிருப்பது புதிய விவாதப்பொருளாகியிருக்கிறது.

விஜய் அருவா பிடித்து பல பேரை வெட்டினாலோ அல்லது அஜித் தன்னுடைய படங்களில் துப்பாக்கியால் கொலைகள் செய்தாலும் அதனை ரசிகர்கள் யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அது வெறும் மாஸ் சினிமா என்று நினைத்து கடந்து போவார்கள். உதாரணத்திற்கு, திருப்பாச்சி படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முத்தையா போன்ற இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் அப்படியானது அல்ல. அவர் மிகவும் யதார்த்தமாக படத்தைத் தருபவர். மண்வாசனை மிக்க படங்களை எளிதில் எடுக்கக் கூடியவர். பல தரப்பினரையும் அவரது உருவாக்கும் கதாபாத்திரங்கள் ஒன்றவைத்துவிடுகிறது. நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் வாழ்க்கையை தத்ரூபமாக எடுத்தாலும், வன்முறை காட்சிகளில் மட்டும் ஏனோ அவர் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இது, இந்தப் படத்திலும் தனித்து நிற்கிறது.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வங்கப்பட்டிருக்கிறது. அதாவது, அளவுக்கு அதிகமான வன்முறையின் காரணமாக, பெரியவர்கள் வழிகாட்டுதலுடன் சிறுவர்கள், குழந்தைகள் பார்க்கலாம். ஆனால், படம் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்க முடியாத வகையில், டிவியிலேயே ரிலீஸானதால் குழந்தைகளும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் வைத்தாவது வன்முறைகளை சற்றே கவனத்துடன் கையாண்டிருக்கலாம்.

க்ளைமேக்ஸ் காட்சிகள் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சற்றே புதுமையை புகுத்தி இருக்கிறார் இயக்குநர். லட்சுமி மேனனி கடைசி சில நிமிட நடிப்பிற்கு வரவேற்பு இருக்கவும் வாய்ப்புண்டு. கடைசி சில நிமிடங்கள் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். இந்தப் படத்திற்கு 'புலிக்குத்தி பாண்டியம்மா' அல்லது 'புலிக்குத்தி பேச்சியம்மா' என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com