தன் வாழ்வில் மிகப்பெரும் துயரத்தை சிம்பு உருவாக்கிவிட்டார் என ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மைக்கேல் ராயப்பன், “ என் வாழ்வில் மிகப்பெரும் துயரத்தை சிம்பு உருவாக்கிவிட்டார். அட்வான்ஸ் வாங்கியது முதல் மொத்தப் படத்தையும் சிம்பு கையிலெடுத்துக் கொண்டார். சூட்டிங் தொடங்கியது முதல் சிம்பு பல கஷ்டங்களைக் கொடுத்தார்.
35% படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே படத்தை வெளியிட வேண்டும் என எங்களை வற்புறுத்தினார். என்ன இழப்பு வந்தாலும் அதற்கு நான் பொறுப்பு என சிம்பு கூறினார். அதோடு இரண்டு பாகமாக எடுக்க வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் இரண்டாம் பாகம் நடித்துத் தருகிறேன் என்றவரை இப்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இழப்புகளை சிம்புதான் ஈடுகட்ட வேண்டும். 20 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “துபாயில் தொடங்கி காசியில் முடியும் வகையில் தான் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் பல மாற்றங்களை செய்தார் சிம்பு. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் பெரிய நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியின்றியே தொடர்ந்தோம். பணம் வாங்கும் போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் தான் நடிக்க வைப்பதாக சொன்னார். ஆனால், இப்போது அழைத்தால் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பேச மறுக்கிறார்” என்று புலம்பினார்.