கொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாரிப்பாளர் தாணு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.
தமிழகத்தின் முன்னணி தயாரிப்பாளர் தாணு, முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் அளித்துள்ளதோடு முதல்வர் மு.க ஸ்டாலினின் ஒரு மாத ஆட்சியை பாராட்டியும் கடிதம் எழுதியிருக்கிறார். ” பெருந்தொற்று காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில், உங்கள் வேகமான நடையும், விவேகமான முடிவும் ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளவர், 10 லட்சத்திற்கான காசோலையையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், தாணு நிவாரண நிதியை அளித்திருக்கிறார். கடைசியாக தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘கர்ணன்’ வெற்றி பெற்றது. தற்போது சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியின் ‘வாடிவாசல்’ படத்தை தயாரித்து வருகிறார்.