ரீவைண்ட் 2020: கொரோனா பரவலால் திரையரங்குகள் சந்தித்த பிரச்னைகள்

ரீவைண்ட் 2020: கொரோனா பரவலால் திரையரங்குகள் சந்தித்த பிரச்னைகள்
ரீவைண்ட் 2020: கொரோனா பரவலால் திரையரங்குகள் சந்தித்த பிரச்னைகள்
Published on

2020-ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையங்குகள் எதிர்கொண்ட பிரச்னைகளை பார்க்கலாம். 

> கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

> ஊரடங்கின்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்றவுடன், 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளரின் நலன் கருதி தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

> திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை திரையிட விபிஎஃப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த நிலையில், வரும் காலங்களில் விபிஎஃப் கட்டணத்தை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

> இது சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு மாதங்களாக நடைபெற்ற நிலையில் பிரச்னையில் தலையிட்ட க்யூப் நிறுவனம், நவம்பர் மாதம் இறுதிவரை இலவச சலுகையை வழங்க முன்வந்தது. தற்போது 40 சதவீத சலுகையுடன் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்திவருகின்றனர். இந்தச் சலுகையானது வரும் மார்ச் மாத இறுதிவரை மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

> திரையரங்குகள் மூடப்பட்டதால், மக்களிடம் ஓடிடி தளங்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன.

> சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான “ பொன்மகள் வந்தாள்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்தாலும், இதற்கு ஆதரவு கருத்துகளும் வந்தன. இதனைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படமும் ஓடிடியில் வெளியிடப்படும் என சூர்யா அறிவித்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

> மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.

> இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது.

> தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

> திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், மக்கள் எதிர்பார்த்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தினாலும் பெரும்பான்மையான பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அதன் காரணமாக மீண்டும் 400 திரையரங்குகள் மூடப்பட்டன.

> ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளித்த மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் படத்தை திரையரங்கில் வெளியிடவே விருப்பம் தெரிவித்தது.

> திரையரங்கு பார்வையாளர்களை மீண்டும் திரையங்கினுள் கொண்டுவர மாஸ்டர் படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் நம்பி இருக்கின்றனர்.ஆதலால், அப்படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித், மாஸ்டர் படத்தை 1000 திரையரங்கில் வெளியிட வலியுறுத்தினார்.

> மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தையும் அதே தினத்தில் வெளியிட அந்தப் பட தயாரிப்பாளரை அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com