சமீப காலமாக விஜய் நடித்த படங்கள் வெளியாகும் தருணங்களில் சர்ச்சைகள் கிளம்புவது தொடர்நிகழ்வாக மாறியுள்ளது.
விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பர வேலைகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். மெர்சல் திரைப்படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
விஜய் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தடைகளை தாண்டியே திரையை எட்டியிருக்கின்றன. காவலன் திரைப்படம் 2011-ம் ஆண்டு வெளியானது. பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் ஏற்பட்ட சில பிரச்னைகள், படத்திற்கு எதிராக விஸ்வரூபமெடுத்து படம் வெளியாவதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது. அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்திற்கு சில அமைப்புகள் தடை கோரின. ஆனால், அதை எல்லாம் தாண்டி துப்பாக்கி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைப் படைத்தது.
2013 தலைவா- Time to lead என தலைப்பு வைத்ததால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி Time to lead எனும் கேப்சனை நீக்கிவிட்டு படத்தினை வெளியிட்டனர். ஆனால், இதற்கு முன்பாக மற்ற மாநிலங்களில் வெளியாகிவிட்டதால், தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு திருட்டி டிவிடி வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
கத்தி படம் வெளியாவதற்கு முன்பே அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா, ராஜபக்சவின் மகனுக்கு சொந்தமானது என அரசியல் கட்சிகள் சில பிரச்னைகளை கிளப்பின. அந்த தடையை தாண்டி வெளிவந்த கத்தி திரைப்படமும் ஹிட்டானது. அதன்பிறகு, புலி வெளியாகும் போது வருமானவரி சோதனை என தொடர்ந்த பிரச்னைகள் தற்போது மெர்சல் வரை நீள்கிறது.
மெர்சல் தலைப்பு பிரச்னை கடந்த 6-ம் தேதி முடிவுக்கு வர, மெர்சல் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இவை ஒருபுறமிருக்க, கேளிக்கை வரியை நீக்கும் வரை புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருப்பதும் மெர்சல் படத்திற்கு இடையூறாக உள்ளது. விலங்குநல வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் புதிய சிக்கல் ஒன்றும் ஏற்பட்டுள்ளது.