பிரசாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 'அந்தகன்' திரைப்படத்தின், புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றப் படம் ‘அந்தாதுன்’. இந்தப் படம் தமிழில், ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை தியாகராஜன் இயக்க, பிரசாந்த் நடிக்கிறார். ‘அந்தகன்’ படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வனிதா, கார்த்திக், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. படத்தின் இயக்குநர் தியாகராஜன் இதுபற்றி கூறும்போது, “போஸ்ட் புரொடக்ஷன் பணியின்போது, அந்தகன் படத்தைப் பார்த்த தொழில்நுட்பக் குழுவினர், மிகவும் நன்றாக இருந்ததாக கூறினர். அந்தகன் படத்தை உருவாக்கும் பணியில், மிகவும் திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கலா மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். ராம் குமார் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். நடிகர்கள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தப்படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞராக பிரசாந்த் நடிக்கிறார். மேலும் லண்டன் ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் பியானோவில், 4-வது கிரேடு முடித்துள்ளதால், அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.
படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் படத்தை வெளியிட எதிர்பார்த்து காத்திருக்கிறோம். குறிப்பாக மார்ச் மாதம் ஆடியோ வெளியீட்டை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்போது தமிழக அரசு திரையரங்குகளில், 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதித்துள்ளதால், இந்தக் கோடையில் படத்தை வெளியிடுவோம் என்று நம்புகிறோம். இந்தப் படத்தில் தமிழுக்கு ஏற்றவாறு, சில ஆச்சரியமான மற்றும் கூடுதல் திருப்பங்கள் அடங்கிய விஷயங்களை சேர்த்துள்ளோம். இந்தப் படம் எதிர்பார்த்ததைவிட நன்றாக வந்துள்ளதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.