புயலால் பாதிக்கப்பட்ட கோவளம் பகுதி மக்களை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ஃபவுண்டேஷன் மூலம் தங்கவைத்து பேருதவிகளை செய்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறிப்படும் பிரகாஷ்ராஜ், துணிச்சலோடு கருத்துக்களை தெரிவித்து நிஜத்தில் ‘ஹீரோ’ என்பதை நிரூபிப்பவர்.
களத்திலும் இறங்கி மக்களுக்குக்காக பொங்கி வெடிப்பவர். இந்நிலையில், தெற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் பாதிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், நிவர் புயல் பாண்டிச்சேரியின் வடக்குப் பகுதியான மரக்காணம் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது.
புயல் வருவதற்குமுன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல் அருகே வசிக்கும் மக்களும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் அரசால் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடல் மற்றும் ஆற்றுப் பகுதியான சென்னை அருகே உள்ள கோவளத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தனது பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன் மூலம் தங்கவைத்து உணவும் அளித்து பேருதவி புரிந்திருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளவர், “இப்போதுதான் என்னால் தூங்க முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, தனது ஃபவுண்டேஷன் மூலம் கொரோனா சமயத்தில் ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்டப் மளிகைப் பொருட்கள் வழங்கியது, பள்ளிகளை மறு சீரமைத்தது, பள்ளிகளுக்கு இலவச கழிப்பிட வசதிகளை செய்துகொடுத்தது, பட்டியலின மாணவியை வெளிநாட்டில் படிக்க முழு படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டது என பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.