நடிகர் மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார்.
கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அதற்கு பிரபல நடிகர் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கேரள அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் மோகன்லாலை அழைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மீறி அழைத்தால் விழாவினை புறக்கணிப்போம் என்றும் கூறி 105 நடிகர், நடிகைககள் கையெழுத்திட்டு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இக்கடிதத்தில் பிரகாஷ் ராஜும் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவிருந்த நிலையில் அவரது விளக்கம் வெளியாகியுள்ளது. மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் மறுத்துள்ளார். மலையாள நடிகை பாலியல் கொடுமைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதாகியிருந்தார். இதைத்தொடர்ந்து அம்மா எனப்படும் மலையாள திரைப்பட நடிகர்கள் அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை மீண்டும் அந்த அமைப்பில் சேர்த்துக்கொண்டதாக கூறி அச்சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.