காதல் ஜோடிக்கு மொபைல் போன் மூலம் செக் வைக்கும் வில்லத்தனமான தந்தை, இதுதான் ‘லவ் டுடே’ பட ஒன்லைன்.
உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) - நிகிதா (இவானா) இருவரும் காதலர்கள். சாட்டிங், டேட்டிங் என ஜாலியாக காதல் வளர்க்கிறார்கள். இந்தக் காதல் விவகாரம் இவானாவின் ஸ்ட்ரிக்ட் அப்பா வேணு சாஸ்திரிக்கு (சத்யராஜ்) தெரிந்துவிட, அவர் இந்த இருவருக்கும் ஒரு ஒன்டே சேலஞ்ச் கொடுக்கிறார். ஒரு நாள் முழுவதும் பிரதீப்பின் மொபைல் இவனாவிடமும், இவானா மொபைல் பிரதீப்பிடமும் எக்ஸ்சேஞ்ச் செய்து உபயோகப்படுத்த வேண்டும். அந்த ஒரு நாளைக் கடந்த பின்னும் இருவரும் காதலில் நிலைத்திருந்தால், அவர்களின் திருமணத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிறார் சத்யராஜ். மொபைல்கள் இடம்மாறிய பின் காதல் ஜோடியின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
குறும்படமாக பெரிய வரவேற்பு பெற்ற, தனது ‘அப்பா லாக்’- ஐ முழு நீளப் படமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பிரதீப். இளைஞர்களை கவரக்கூடிய ஒரு கதைக்குள் தலைமுறையின் ஆண் - பெண் உறவு சிக்கல் பற்றியும், உறவுகளுக்கு நடுவே நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் பேச முயன்றிருக்கிறார். படத்தின் முதல் பாசிட்டிவ், கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும், அவர்களது நடிப்பும். கதைக்குத் தேவையான மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்து இருவரும் மொபைல் மாற்றிக் கொள்ளும் கதை, அதன் பிறகு எப்படி நகரும் என்ற ஆர்வத்தோடு நாம் காத்திருக்க, அதன் பின் ஹீரோவுக்கு வரும் சவால்கள் எல்லாம் ரகளையான ரகம்.
நடிகராகவும் பிரதீப் ரங்கநாதன் ஒரு சுவாரஸ்யமான அறிமுகம். ஹூமர், எமோஷனல் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, இவானாவுடன் வாக்குவாதம் செய்வது, ராதிகாவிடம் உண்மையை கலங்கியபடி சொல்வது ஆகிய காட்சிகளை உதாரணமாக சொல்லல்லாம். இவானா நடிப்பும் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இருவரும் மொபைலை மாற்றிக் கொண்ட பிறகு வரும் பல காட்சிகளில் இவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. சத்யராஜ் படத்தில் சில காட்சிகளே வந்தாலும், தனது தனித்துவமான நடிப்பால் படம் முழுக்க வந்த உணர்வைத் தருகிறார்.
பிரதீப்பை மிக அசால்ட்டாக ஹேண்டில் செய்வது, இடைவேளை காட்சி ஆகிய இடங்களில் அட்டகாசம். ராதிகா மிக அழகாக தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்களுக்கு பதிவு செய்கிறார். பிரதீப்பிடம் உரையாடும் அந்த ஒரே ஒரு காட்சி போதும், அவரது நடிப்பை சொல்ல. இவர்கள் தவிர ரவீணா ரவி, யோகிபாபு, ஃபைனலி பாரத் ஆகியோரும் ஈர்க்கிறார்கள். குறிப்பாக யோகிபாபு சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் அவரின் நடிப்பு மிக எளிமையாக, எதார்த்தமாக இருந்தது.
யுவனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும், படத்தின் பின்னணி இசை எமோஷனல் காட்சிகளின் உணர்வை அழகாகக் கடத்துகிறது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு பல சுவாரஸ்யமான விஷுவல்ஸைக் கொடுத்திருக்கிறது. படத்தின் நீளத்தை எந்த இடத்திலும் யோசிக்கவிடாத அளவில் கதை நகர பிரதீப் ஈ ராகவின் பரபரப்பான எடிட்டிங் உதவி இருக்கிறது.
தேவை இல்லாத காட்சிகள் என எதுவும் இல்லாமல் கதையின் போக்கிலேயே காட்சிகள் அமைத்திருந்த விதமும் சிறப்பு. பொதுவாக ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்ட படங்கள் என்றால், பெண்ணை மட்டுமே குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் படங்களே சினிமாவில் அதிகம். ஆனால் இருவர் பக்கத்திலும் இருக்கும் குறைகளைப் பற்றி உரையாட முயன்றதும், இறுதியில் எந்த ஒரு ரிலேஷன்ஷிப் என்றாலும், அதில் நம்பிக்கைதான் மிக முக்கியம் என முடித்த விதமும் சிறப்பு.
அதே நேரம் படத்தில் உள்ள சில குறைகள் என எடுத்துக் கொண்டால், வெறுமனே மொபைல், க்ரஷ், எக்ஸ், சாட்டிங் இவை மட்டும்தான் காதல் சார்ந்த விஷயங்கள் என சுருக்கி, மேம்போக்காக அணுகியிருப்பது சற்று நெருடல். சத்யராஜ் கதாபாத்திரம் படத்தின் இறுதியில், இதெல்லாம் நான் ஏன் செய்தேன் தெரியுமா என இன்ஸ்டண்டாக கொடுக்கும் ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் அவ்வளவு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இது போல சில குறைகள் இருந்தாலும், ஒரு ஜாலியான எண்டர்டெய்னராகவும், சின்ன கருத்து சொல்லும் படமாக கவர்கிறது.
ஒரு சுவாரஸ்யமான கதையை நிறைய ஹூமரும், கொஞ்சம் எமோஷனும் கலந்து கட்டி கொடுத்திருக்கும் இந்த `லவ் டுடே’ நிச்சயம் பார்வையாளர்களுக்கு, ரசனையான விருந்தாக இருக்கும்!