நகரத்துக்குள் தொடர்ந்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கொலை செய்வது யார்? ஏன்? என்பதுதான் பஹீரா ஒன்லைன்.
படத்தின் துவக்கத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு டெடி பியர் ஒன்று பரிசாக வருகிறது. அது வந்து சில நிமிடங்களில் அந்தப் பெண் கொலை செய்யப்படுகிறார். இதே போன்ற கொலைகள் தொடர்ந்தவாறு இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்வது யார் என விசாரிக்கிறார் காவலதிகாரி சாய்குமார். இன்னொரு பக்கம் பிரபுதேவா சென்னை, மும்பை, ஹைதராபாத் என வெவ்வேறு நகரங்களில், வெவேறு பெயர்களுடன், வெவ்வேறு பெண்களை காதலித்து வருகிறார். அந்தப் பெண்களை திருமணமும் செய்கிறார். நகரத்தில் நடக்கும் கொலைகளை செய்வது யார்? அதற்கு காரணம் என்ன? பிரபுதேவாவுக்கும் இந்தக் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம், எதற்காக பல பெண்களை திருமணம் செய்கிறார் என்பதெல்லாம் தான் `பஹீரா’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் ஒரே பெரிய பலம் பிரபுதேவா தான். காட்சிக்கு என்ன விதமான நடிப்பு தேவை என்றாலும், என்ன தோற்றம் என்றாலும் அவற்றை அட்டகாசமாக செய்திருக்கிறார். ஒரு காட்சியில் பெண் தோற்றத்தில் வருவது, ஒரு காட்சியில் கொடூர கொலை முகமும், வேறொரு காட்சியில் நட்பாக பெண்ணிடம் பேசுவதுமாக ரசிக்க வைக்கிறார். இதற்கடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தக் கதையை ட்ரீட் செய்திருந்த விதம். குறிப்பாக படத்தின் முதல் பாதி சற்று குழப்பமானதாக இருந்தாலும், பரபரவென நகர்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, செல்வகுமார், அபிநந்தன் ராமானுஜனுடைய ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது. மிரட்டலான கோணங்கள் வைப்பது, லைட்டிங் மூலம் திகில் சேர்ப்பது என முடிந்தவரை நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கணேசன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சிறப்பு. படத்தில் இருந்த பாடல்களை விட பழைய பாடல் ஒன்றை ஒரு காட்சியில் பயன்படுத்தியிருந்த ஐடியாவும் ரசிக்கும்படி இருந்தது. இவை எல்லாம் படத்தில் ஓரளவு தேடினால் கிடைக்கக் கூடிய நிறைகள்.
ஆனால் படத்தின் குறைகள் என்றால் ஒரு லாரியில் ஏற்றும் அளவுக்கு இருக்கிறது.
ஆதிக் தனது முதல் படமான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் பெண்களை எப்படி உருவகப்படுத்தியிருந்தாரோ, அதன் மேம்பட்ட வடிவமாக தான் பஹீரா இருக்கிறது. பெண்கள் என்றாலே மோசமானவர்கள், ஒருவனைத் தாண்டி இன்னொருவனை காதலித்தால் அவள் தவறான பெண், எட்டு வருடமாக ஒரே ஒருவனை மட்டும் காதலிக்கும் பெண் மிக நல்ல பெண் என மிக மிக பிற்போக்கான கருத்துக்கள் நிறைந்திருக்கிறது. படத்தின் இறுதியில் ஒரு கதாபாத்திரத்தை வைத்து, அதுவரை அவர் படத்தில் காட்டியதில் இருந்த தவறுகளை பேசும்படி காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணவில்லை.
இது போன்ற விஷயங்களை பேசும் படம் இங்கு புதிதில்லை. இதற்கு முன் சிகப்பு ரோஜாக்கள், மன்மதன் போன்ற படங்களின் நாம் பார்த்தவை தான். அதில் இருந்த தவறான விஷயங்கள், மக்களின் புரிதலுக்கு ஏற்ப அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனாலும் ஒரு படமாக பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு கடைசிவரை சுவாரஸ்யத்தைக் கொடுத்தன. ஆனால், பஹீராவில் உள்ள பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் விஷயங்களை தள்ளி வைத்துவிட்டு, வெறும் பொழுது போக்குப் படமாக பார்த்தாலும், எந்த சுவாரஸ்யமும் இல்லாத படமாகவே இருக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் எந்த ஒரு விஷயமும் இல்லாமல் இழு இழுவென இழுத்தடித்து கதை சொல்லியிருக்கிறார்.
காதல் - ரிலேஷன்ஷிப் சிக்கல்கள், பெண் கல்வி, பாலியல் அத்து மீறல்களைப் பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்காக 18 + படம் வரக் கூடாது என்று அவசியமில்லை. அப்படி வரும் படத்தில் என்ன சொல்லப் போகிறோம் என்பதில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்தப் படம் விளம்பரப்படுத்தப்பட்டதைப் போல இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படம். வக்கிரமான, வன்முறையான, கவர்ச்சியான காட்சிகள் படத்தில் உண்டு. அதற்கு தயாரானவர்களும், வெறுமனே பெண்களை திட்டி வசனம் வைத்தால் கைதட்டி ரசிப்பேன் என்பவர்களுக்குமான படம் இது. மற்றபடி சினிமா ரசிகர்களுக்கோ, புதிதாக ஒரு அனுபவத்தையோ எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு `பஹீரா’ ஏமாற்றத்தையே தரும்